உங்கள் ஆதார் எண்ணை டிமேட் கணக்குடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி (SEBI) இதனை அறிவித்துள்ளது. ஆதாரை இணைக்கத் தவறினால், டிமேட் கணக்கு முடக்கப்படலாம்.
வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில், நிதிக் கணக்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் ஆதார் எண்ணை உங்கள் டீமேட் கணக்குடன் இணைப்பது அவசியம். இந்த இணைப்பு உங்கள் முதலீடுகளின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.
சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி (SEBI) டீமேட் கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதற்காக வங்கிக்கோ வேறு அலுவலகத்திற்கோ செல்லத் தேவையில்லை. வீட்டில் இருந்தே ஆன்லைனில் டீமேட் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
நீங்கள் ஒரு புதிய முதலீட்டாளராக இருந்தாலும் சரி அல்லது அனுபவம் வாய்ந்த வர்த்தகராக இருந்தாலும் சரி, தேவையான ஆவணங்கள் உங்களிடம் தயாராக இருந்தால் சில நிமிடங்களில் ஆதார் - டீமேட் இணைப்பை முடிக்க முடியும். இது ஆதார் KYC அடிப்படையில் மோசடிகளுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. ஆனால், ஆதாரை இணைக்கத் தவறினால், உங்கள் டீமேட் கணக்கு முடக்கப்படலாம். அதாவது ஆதார் எண்ணை இணைக்கும் வரை எந்த பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியாமல் போய்விடும்.
தேவையான ஆவணங்கள்:
உங்கள் டிமேட் கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான ஆன்லைன் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், பின்வரும் ஆவணங்கள் மற்றும் தகவல்கள் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆதார் அட்டை, பான் கார்டு, டீமேட் கணக்கு விவரங்கள் (DP ஐடி மற்றும் கிளைண்ட் ஐடி), பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண், பதிவுசெய்யப்பட்ட ஈமெயில் ஐடி ஆகியவை தயாராக இருக்க வேண்டும்.
ஆன்லைனில் இணைப்பது எப்படி?
www.nsdl.co.in (NSDL) அல்லது www.cdslindia.com (CDSL) என்ற இணையதளத்திற்குச் செல்லவும். பிறகு, உங்கள் ஆதார் எண்ணை உங்கள் டிமேட் கணக்குடன் இணைக்க வழங்கப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இணைப்பைக் கிளிக் செய்தவுடன், அடுத்த கட்டத்திற்குச் செல்ல, DP பெயர், DP ID, வாடிக்கையாளர் ID மற்றும் PAN போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.
விவரங்களை உள்ளிட்ட பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலுக்கு ஒரு OTP கிடைக்கும். அந்த OTP ஐ அதற்குரிய இடத்தில் டைப் செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லவும். இப்போது டீமேட் கணக்கின் விவரங்களைப் பார்க்கலாம்.
உங்கள் பெயர், வயது, முகவரி, மொபைல் எண், இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு, மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்திய பிறகு அடுத்த கட்டத்துக்குச் செல்லலாம். அதில் உங்கள் ஆதார் எண், பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் கவனமாக டைப் செய்ய வேண்டும். பின்னர் 'Continue' என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். இந்த OTP நேரடியாக ஆதார் ஆணையத்தால் (UIDAI) அனுப்பப்படுகிறது. OTP ஐ டைப் செய்து 'Submit' செய்யுங்கள். உங்கள் ஆதார் எண் டிமேட் கணக்குடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் உங்களுக்குக் கிடைக்கும்.
டீமேட் - ஆதார் இணைப்பின் நன்மைகள்:
உங்கள் ஆதாரை இணைப்பது உங்கள் டீமேட் கணக்கின் ஒட்டுமொத்த பாதுகாப்பை மேம்படுத்துகிறது, மோசடி அல்லது ஹேக்கிங் வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கிறது. மேலும், உங்கள் ஆதார் ஏற்கனவே டீமேட் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், KYC நடைமுறைகள் தடையின்றி தொடரும். இந்த இணைப்பு உங்கள் வங்கி, மியூச்சுவல் ஃபண்டு உள்ளிட்ட அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் ஆதார் மூலம் ஒருங்கிணைக்கிறது.