
உலகின் சக்திவாய்ந்த பெண்களுக்கான 2025-ம் ஆண்டின் புதிய பட்டியலை ஃபோர்ப்ஸ் (Forbes) இதழ் வெளியிட்டுள்ளது. அரசியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் ஆளுமை செலுத்தும் பெண்களை அங்கீகரிக்கும் இந்தப் பட்டியலில், இம்முறை மூன்று இந்தியப் பெண்கள் இடம்பிடித்து நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து உலக அரங்கில் ஜொலிக்கும் அந்த மூன்று இந்தியப் பெண்மணிகள் யார் என்பதை இங்கே காண்போம்.
இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்திருப்பவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தான். உலக அளவில் 24-வது இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் இவர் பிடித்துள்ளார். சுமார் 140 கோடி மக்களின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இவருடையது. 2025-ல் தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்து, இந்திய வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை இவர் படைத்துள்ளார். வரி சீர்திருத்தங்கள் முதல் பொருளாதாரக் கொள்கைகள் வரை இவரது முடிவுகள் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பட்டியலில் இடம்பிடித்த இரண்டாவது இந்தியர், எச்சிஎல் (HCL) நிறுவனத்தின் சிஇஓ ரோஷினி நாடார் மல்ஹோத்ரா. இவர் உலக அளவில் 76-வது இடத்தில் உள்ளார். ஹூருன் (Hurun) 2025 அறிக்கையின்படி, இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.2.8 லட்சம் கோடி ($31 பில்லியன்) ஆகும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை வழிநடத்தும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. சுமார் 14 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் எச்சிஎல் நிறுவனத்தின் முக்கிய முடிவுகள் அனைத்தும் இவரது தலைமையிலேயே எடுக்கப்படுகின்றன.
மூன்றாவது இடம்பிடித்தவர் பயோகான் (Biocon) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கிரண் மஜும்தார் ஷா. உலகத் தரவரிசையில் இவர் 83-வது இடத்தில் உள்ளார். சுமார் 3.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், இந்தியாவின் மிகவும் பணக்கார சுயதொழில் முனைவோர் (Richest Self-made Woman) என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்குக் குறைவான விலையில் தரமான மருந்துகளைத் தயாரிப்பதில் இவரது பயோகான் நிறுவனம் உலக அளவில் முக்கியப் பங்காற்றி வருகிறது.