
Demand Increasing for Engineering Courses in Tamil Nadu: தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்து விட்ட நிலையில், மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை பொறியியல் படிப்புகளுக்கு காலம், காலமாக மசுவு அதிகரித்து வந்தது. இதனால் மூலை, முடுக்கெல்லாம் பொறியியல் பட்டதாரிகள் பெருகி விட்டதால் பொறியியல் படிப்புக்கு வேலை கிடைப்பது கடினமாகி விட்டது. பல்வேறு பொறியியல் பட்டதாரிகள் வேறு வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மீண்டும் பொறியியல் படிப்புகளுக்கு செல்வாக்கு அதிகரிப்பு
இதனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு மவுசு குறைந்து, கலை, அறியல் படிப்புகளுக்கு கிராக்கி அதிகரித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு மீண்டும் மவுசு அதிகரித்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கு கடந்த 29 நாட்களில் 2,90,678 மாணாக்கர்கள் பதிவு செய்துள்ளனர்.
2,90,678 மாணவர்கள் விண்ணப்பம்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்,''கடந்த 07.05.2025 அன்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பப்பட்டது. இன்று (அதாவது நேற்று) மாலை 6 மணி நிலவரப்படி 2,90,678 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர். இதில் 1,27,337 மாணவர்களும், 1,05,395 மாணவிகளும் ஆக மொத்தம் 2,32,732 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதுவரை விண்ணப்பிக்காத மாணாக்கர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, வரும் 06.06.2025-க்குள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் பொறியியல் சேர்க்கைக்கான தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விண்ணப்ப பதிவு செய்த மாணாக்கர்கள் தங்களது சான்றிதழ்களை 09.06.2025-க்குள் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாணாக்கர் சேரக்கை சேவை மையங்கள்
மாணாக்கர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியல் மாணாக்கர் சேரக்கை சேவை மையங்கள் (TFC Centres)நிறுவப்பட்டுள்ளன. அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் 1800425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளலாம்'' என கூறப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு மவுசு அதிகரிப்பது ஏன்?
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்பு முடித்து வேலைக்காக காத்திருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் பொறியியல் படிப்புக்கு மசுவு அதிகரிப்பதற்கு காரணம் பொறியியல் படிப்பு படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை மாணவர்கள் மனதில் இருப்பதுதான் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். இந்தியா போன்ற பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் முன்னேறிய நாடுகளில் பொறியியல் பட்டதாரிகளின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிற்து என்பதுதான் உண்மை.
கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு
பல்வேறு துறைகளிலும் பொறியியல் படிப்புகளுக்கான வேலைவாய்ப்பு குவிந்து கிடக்கிறது. ஆனால் மாணவ, மாணவிகள் பொறியியல் படிப்புகளை எந்த கல்வி நிறுவனங்களில் படிக்கிறார்கள்? எந்த துறையை தேர்வு செய்கிறார்க? வெறும் மனப்பாடம் செய்யாமல் எந்த அளவுக்கு புரிந்து படிக்கிறார்கள்? என்பதை பொறுத்தே அவர்களுக்கு வேலை கிடைக்கும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.