
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), வரவிருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான செய்முறைத் தேர்வுகள் (Practical Exams) குறித்து மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிமுறைகள், மதிப்பெண் வழங்கும் முறை மற்றும் காலக்கெடு குறித்த முழுமையான வழிகாட்டுதல்களை இங்கே காண்போம்.
2025-2026 கல்வியாண்டிற்கான செய்முறைத் தேர்வுகள், ப்ராஜெக்ட் பணிகள் மற்றும் உள் மதிப்பீடுகள் (Internal Assessment) ஆகியவற்றை நடத்துவதற்கான நிலையான வழிகாட்டுதல்களை (SOP) சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது. இதில் மிக முக்கியமானது, "பதிவேற்றப்பட்ட மதிப்பெண்களில் மாற்றம் கோரும் எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படாது" என்பதுதான். எனவே, ஆசிரியர்கள் மதிப்பெண்களை இணையதளத்தில் ஏற்றும்போது அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான பள்ளிகளுக்குச் செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 1, 2026 முதல் பிப்ரவரி 14, 2026 வரை நடைபெறும். அதே சமயம், குளிர்காலப் பள்ளிகளுக்கு (Winter Schools) முன்கூட்டியே அதாவது நவம்பர் 6, 2025 முதல் டிசம்பர் 6, 2025 வரை தேர்வுகள் நடத்தப்படும்.
• வெளிப்புறத் தேர்வாளர் கிடையாது: 10-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளுக்குப் பள்ளியின் ஆசிரியர்களே மேற்பார்வையாளர்களாகச் செயல்படுவார்கள். வெளியிலிருந்து வேறு யாரும் நியமிக்கப்பட மாட்டார்கள்.
• விடைத்தாள்கள்: இதற்கான விடைத்தாள்களை வாரியம் வழங்காது. பள்ளிகளே சொந்தமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.
• பாதுகாப்பு: தேர்வு முடிந்த பின் விடைத்தாள்களைப் பிராந்திய அலுவலகத்திற்கு அனுப்பத் தேவையில்லை; பள்ளிகளே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
12-ம் வகுப்பைப் பொறுத்தவரை விதிமுறைகள் சற்று கடுமையாக்கப்பட்டுள்ளன.
• வெளிப்புறத் தேர்வாளர் (External Examiner): சி.பி.எஸ்.இ வாரியத்தால் நியமிக்கப்படும் வெளிப்புறத் தேர்வாளர் முன்னிலையில் மட்டுமே தேர்வுகள் நடக்க வேண்டும். உள்ளூரில் பள்ளிகளே யாரையும் நியமிக்கக் கூடாது.
• கூட்டு முடிவு: செய்முறைத் தேர்வுக்கான வினாக்களை உள் மற்றும் வெளிப்புறத் தேர்வாளர்கள் இணைந்து பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
• மதிப்பெண் முறை: ஆய்வகப் பணி, நேர்முகத் தேர்வு (Viva), ப்ராஜெக்ட் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக மதிப்பெண்களைப் பதிவு செய்ய வேண்டும்.
• பின்னம் கூடாது: மதிப்பெண்கள் முழு எண்களாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மாணவர் 25.5 மதிப்பெண் பெற்றால், அதை 26 ஆகப் பதிவு செய்ய வேண்டும்.
தேர்வுகள் முடிந்த உடனேயே, அந்த நாலிலே மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் காலதாமதம் செய்யக்கூடாது. விடைத்தாளில் உள்ள தகவல்கள் துல்லியமாக இருப்பதை இரு தேர்வாளர்களும் உறுதிமொழி அளிக்க வேண்டும்.
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களால் குறிப்பிட்ட தேதியில் செய்முறைத் தேர்வில் பங்கேற்க முடியாவிட்டால், அவர்களுக்கு வேறொரு தேதியில் தேர்வு நடத்தப் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நடக்க வேண்டும்.