
Renault New Car Design Center in Chennai : பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாக கொண்ட கார் உற்பத்தி நிறுவனமான ரெனால்ட் நிறுவனம் இப்போது சென்னையில் செங்கல்பட்டு பகுதியில் புதிய கார் வடிவமைப்பு மையத்தை தொடங்கியுள்ளது. மஹிந்திரா சிட்டி பகுதியில் கிட்டத்தட்ட 1500 சதுரமீட்டர் பரப்பளவில் இந்த புதிய கார் டிசைன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் அதிநவீன வசதிகள், டிஜிட்டல் கருவிகள், வடிவமைப்பை மேம்படுத்தக்கூடிய 3டி மாடலிங் என்று பல வசதிகள் உள்ளன. இந்த புதிய வசதிகள் அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் 5 மாடல்களையும் வடிவமைக்கும் பொறுப்பை கொண்டிருக்கும். இந்த புதிய வடிவமைப்பு மையத்தில் 30க்கும் அதிகமான வடிவமைப்பு நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இது குறித்து ரெனால்ட் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி வெங்கட்ராமன் மாமில்லபல்லே கூறியிருப்பதாவது: இந்திய கார் சந்தையில் ரெனால்ட்டின் பங்கு 1 சதவீதத்திற்கு குறைவாகவே உள்ளது. சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் புதிய கார் வடிவமைப்பு மையம் மூலமாக ரெனால்ட் இந்தியா கார் சந்தையில் எங்களது பங்கை 3 லிருந்து 5ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இன்னும் 2 ஆண்டுகளில் இந்த புதிய வடிமைப்பு மையத்தின் புதிய வசதிகள் மூலமாக 5 விதமான புதிய எஸ்யூவி கார் மாடல்கள் தயாரிக்கப்பட இருக்கிறது. ஏனென்றால் இந்திய சந்தையில் 54 சதவீதத்திற்கும் அதிகமாக எஸ்யூவி கார்கள் தான் விற்பனை செய்யப்படுகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.