
சமீபத்திய ஜிஎஸ்டி வரிக் குறைப்பின் பலனை கியா இந்தியா வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்குவதாகக் கூறப்படுகிறது. பயணிகள் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால், கியா தனது கார் விலையில் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
புதிய விலைகள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கார்கள் மலிவு விலையில் கிடைக்கப் போவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது. கார் மாடல்களின் விலை குறைப்பு விவரங்களும் வெளியாகியுள்ளன. கியா சோனெட் விலையில் ரூ.1,64,471 வரை குறைக்கப்பட்டுள்ளது. கியா செல்டோஸ் விலை ரூ.75,372, கியா கேரன்ஸ் விலை ரூ.48,513 குறைக்கப்பட்டுள்ளது.
கியா கேரன்ஸ் கிளாசிக் விலையில் ரூ.78,674 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், கியா கார்னிவல் விலையில் மிக அதிகமாக ரூ.4,48,542 குறைப்பு கிடைத்துள்ளது. கியா சைரஸ் விலை ரூ.1,86,003 குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு நிச்சயமாக ஒரு பெரிய நிவாரணம் என கியா இந்தியா எம்.டி. மற்றும் சிஐஓ குவாங் கு லீ தெரிவித்துள்ளார். கார் வாங்கும் முடிவை எளிதாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் பண்டிகை காலத்தில் கார்களுக்கான தேவை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், இந்த விலை குறைப்பால் ஆட்டோமொபைல் துறைக்கும் ஊக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரிச் சீர்திருத்தத்தின் முழு பலனையும் வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதன் மூலம், கார் விற்பனை அதிகரிக்கும்.
இதனால், கார்கள் வாங்க விரும்பும் நபர்கள் பெரிய அளவில் பயன் அடைவார்கள். இதற்கிடையில், கியாவின் எதிர்கால திட்டங்கள் குறித்த செய்தியும் வெளியாகியுள்ளது. 2027ஆம் ஆண்டில், ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் இரண்டாம் தலைமுறை கியா செல்டோஸ் அறிமுகமாக உள்ளது. இது, அதே ஆண்டு வெளியாகும் புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டாவுடன் போட்டியிடும்.
ஹைப்ரிட் செல்டோஸில், கியா தனது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை மின்மயமாக்கவுள்ளது. இதனால், உயர்நிலை மாடல்களில் ஹைப்ரிட் எஞ்சின் கிடைக்கும் நிலையில், மற்ற வேரியண்ட்களில் தற்போதைய பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் தொடரும்.