
எலான் மஸ்க்கின் டெஸ்லா கம்பெனி, இந்திய எலக்ட்ரிக் கார் சந்தையில் வியட்நாம் நிறுவனமான வின்ஃபாஸ்ட்டிடம் பின்தங்கியுள்ளதாக ஒரு ரிப்போர்ட் கூறுகிறது. ஆச்சரியம் என்னவென்றால், இரண்டு நிறுவனங்களும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில்தான் இந்தியாவிற்குள் நுழைந்தன. 2025 செப்டம்பரில் இருவருமே விற்பனையைத் தொடங்கினர். ஆனால், விற்பனையில் டெஸ்லாவை விட வின்ஃபாஸ்ட் சுமார் 10 மடங்கு முன்னிலையில் உள்ளது.
ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, டெஸ்லா இதுவரை இந்தியாவில் 383 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால், வின்ஃபாஸ்ட் நிறுவனமோ சுமார் 3,568 கார்களை விற்று டெஸ்லாவை அசால்ட்டாக முந்தியுள்ளது.
2025-ம் ஆண்டின் பண்டிகைக் காலத்தில்தான் வின்ஃபாஸ்ட் முதல்முறையாக டெஸ்லாவை விட ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் வின்ஃபாஸ்ட் 137 கார்களையும், டெஸ்லா 109 கார்களையும் விற்றன. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பின் (FADA) தரவுகளின்படி, 2025 அக்டோபரில் வின்ஃபாஸ்ட் அபார வளர்ச்சி கண்டது. டெஸ்லா செப்டம்பரில் 69 கார்களையும், அக்டோபரில் 40 கார்களையும் விற்றது. அதே நேரத்தில், வின்ஃபாஸ்ட் செப்டம்பரில் வெறும் 6 கார்களை விற்றாலும், அக்டோபரில் 131 கார்களை விற்று மாஸ் காட்டியது.
இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் டெஸ்லாவின் குறைந்த விற்பனையை விட, வின்ஃபாஸ்ட்டின் அசுர வளர்ச்சிதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களும் பெரிய நம்பிக்கையுடன் இந்தியாவுக்குள் நுழைந்தன, ஆனால் அவர்களின் பயணங்கள் முற்றிலும் மாறுபட்டவை. டெஸ்லா இன்னும் தனது இடத்தைப் பிடிக்க போராடிக்கொண்டிருக்கும்போது, வின்ஃபாஸ்ட் வேகமாக சந்தையைப் பிடித்துவிட்டது. டெஸ்லாவை முந்துவதற்கு வின்ஃபாஸ்ட் என்னதான் செய்தது?
வின்ஃபாஸ்ட் கார்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, இந்தியாவிலேயே தயாரிப்பதில் கவனம் செலுத்தியது. இதுதான் அவர்களின் முதல் வெற்றிப் புள்ளி. உள்நாட்டில் கார்களைத் தயாரிப்பது அதிக லாபம் தரும் என்பதை உணர்ந்த அந்த நிறுவனம், நம்ம தமிழ்நாட்டிலேயே ஒரு ஆலையை அமைத்தது.
இதனால், அதிக இறக்குமதி வரியைத் தவிர்த்து, கார்களின் விலையை கணிசமாகக் குறைக்க முடிந்தது. வின்ஃபாஸ்ட் VF6 மாடல் ரூ.17.29 லட்சத்திற்கும், VF7 மாடல் ரூ.21.89 லட்சத்திற்கும், VF MPV 7 மாடல் ரூ.24.49 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. ஆனால், டெஸ்லாவோ இறக்குமதி பாதையைத் தேர்ந்தெடுத்து, அதன் பிரபலமான மாடல் Y காரை சுமார் ரூ.60 லட்சம் என்ற அதிக விலையில் அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்ச வரையிலான விலை கொண்ட எலக்ட்ரிக் கார்கள் பிரிவுதான் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த விலைப் பிரிவில் உள்ள நிறுவனங்களே அதிக விற்பனையை ஈட்டுகின்றன. உதாரணமாக, மஹிந்திரா நிறுவனம் கடந்த எட்டு மாதங்களில் 32,092 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.
சரியான வியூகம் இருந்தால், சந்தைக்கு தாமதமாக வருவது ஒரு குறையே இல்லை என்பதை வின்ஃபாஸ்ட் நிரூபித்துள்ளது. மறுபுறம், டெஸ்லாவுக்கு தற்போது இந்தியாவில் ஐந்து சூப்பர்சார்ஜர்கள் மட்டுமே உள்ளன. எனவே, வலுவான சார்ஜிங் நெட்வொர்க் இல்லாமல், பெரிய பிராண்ட் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு இந்தியாவில் வெற்றி பெறுவது கடினம் என்பது தெளிவாகிறது.