அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க ஜனவரி 2024க்குள் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அடுத்த வாரம் அமெரிக்காவில் கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கைச் சந்திக்க உள்ளார். அப்போது இருவரும் இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி ஆலையைத் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஜூன் மாதம் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவில் கணிசமான முதலீடுகளைச் செய்ய ஆர்வமாக இருப்பதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் எலான் மஸ்க் இடையேயான நடைபெற இருக்கும் சந்திப்பு முக்கியமானதாக இருக்கும்.
undefined
முன்னதாக, அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்குவதற்கான நடைமுறைகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 2024க்குள் தேவையான அனைத்து அனுமதிகளும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லாவின் இந்தியத் தொழிற்சாலையை நிறுவுதல், காரைத் தயாரித்தல், கூடுதல் உதிரிபாகங்களைத் தயாரித்தல் மற்றும் நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை நிறுவுதல் ஆகிய குறித்து எலான் மஸ்க் மற்றும் பியூஷ் கோயல் இடையேயான பேச்சுக்கள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவின் புதிய தொழில் கொள்கையைப் பற்றியும் அவர்கள் விவாதிக்கலாம் என்று தெரிகிறது. வாகன உற்பத்தியாளர்கள் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட மின்சார வாகனங்களை 15% குறைவான வரியுடன் இறக்குமதி செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட கொள்கைகள் பற்றி பேசப்படும் என்று கருதப்படுகிறது. மின்சார வாகன இறக்குமதி வரியை 100 சதவீதம் குறைக்கவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
டெஸ்லா மற்றும் இந்தியா இடையே பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் நகர்கின்றன என்பதை இந்தச் சந்திப்பு உறுதி செய்வதாகப் பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பிரதமர் மோடியின் அலுவலகம் புதிய மின்சார வாகனக் கொள்கையை விரைவாக அமல்படுத்த பல்வேறு அமைச்சகங்களுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்லா முதன்முதலில் 2021இல் இந்தியாவில் கார் விற்பனை மேற்கொள்ள முயற்சி செய்தது. இப்போது, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால் பேச்சுவார்த்தை முறிந்துபோனது.