
Driving car: காரின் டேஷ்போர்டில் மஞ்சள் நிற எரிபொருள் எச்சரிக்கை விளக்கு (Fuel Reserve Indicator) ஒளிரும் போது, "அடுத்த எரிபொருள் நிலையத்திற்குச் சென்று நிரப்பிக் கொள்ளலாம்" என்று அலட்சியமாக இருப்பது பலரது வழக்கமாக உள்ளது. நகரப்பகுதியானாலும் அல்லது நெடுஞ்சாலையானாலும், வாகனத்தை ரிசர்வ் முறையில் ஓட்டுவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், இந்தப் பழக்கமே காரின் மிகப்பெரிய எதிரி என்று வாகனத் துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சில நூறு ரூபாய்களைத் தள்ளிப்போட நினைத்து, இறுதியில் பல்லாயிரம் ரூபாய்களைச் செலவிட நேரிடலாம்.
தற்போது வரும் நவீன கார்களில் ஃபியூயல் பம்ப் என்பது எரிபொருள் டேங்கிற்கு உள்ளேயே பொருத்தப்பட்டிருக்கும். டேங்கில் உள்ள பெட்ரோல் அல்லது டீசலே அந்த பம்பைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. டேங்கில் எரிபொருள் மிகக் குறைவாக இருக்கும்போது, பம்ப் திரவத்திற்குப் பதிலாகக் காற்றை உறிஞ்சத் தொடங்கும். இதனால் பம்ப் அதிகளவில் சூடாகும். ஒன்று அல்லது இரண்டு முறை இவ்வாறு நடந்தால் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், இதுவே தொடர்கதையானால் பம்பின் சுருள் எரிந்துபோக வாய்ப்புள்ளது. அதனை மாற்ற வேண்டுமென்றால் ரூ.10,000 முதல் ₹18,000 வரை செலவாகலாம்.
இதையும் படிங்க: Upcoming Cars: ஆகஸ்ட்டில் இந்தியாவுக்கு வரிசைகட்டும் புதிய கார்கள்.. ஸ்கோடா முதல் மஹிந்திரா வரை முழு பட்டியல் இதோ
எரிபொருள் டேங்கின் அடிப்பகுதியில் தூசி, துரு மற்றும் சிறிய அளவிலான அழுக்குகள் படிவது இயல்பு. வழக்கமாக டேங்கில் பாதியளவு எரிபொருள் இருக்கும்போது, பம்ப் மேல்மட்டப் பகுதியிலிருந்து எரிபொருளை எடுக்கும். ஆனால் ரிசர்வ் முறையில் ஓடும்போது, டேங்கின் அடிமட்டத்திலிருந்து எரிபொருள் உறிஞ்சப்படுகிறது. அப்போது அங்குள்ள அழுக்குகள் நேரடியாக ஃபியூயல் ஃபில்டர் மற்றும் இன்ஜெக்டருக்குச் செல்லும். இதனால் நாளடைவில் ஃபில்டர் அடைபட்டு, மைலேஜ் குறைவதுடன் என்ஜினின் செயல்திறனும் பாதிக்கப்படும்.
நடுவழியில் நிற்கும் அபாயம்
ரிசர்வ் விளக்கு ஒளிரத் தொடங்கிய பிறகு, 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வாகனம் இயங்கும் என உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டாலும், நடைமுறையில் போக்குவரத்து நெரிசல், ஏசி பயன்பாடு மற்றும் சாலையின் தன்மையைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும். பண்டிகைக் காலப் போக்குவரத்து நெரிசலிலோ, நள்ளிரவிலோ அல்லது ஆள்நடமாட்டம் இல்லாத நெடுஞ்சாலையிலோ எரிபொருள் தீர்ந்துபோனால், அது பண இழப்பு மட்டுமல்லாமல் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். டீசல் கார்களில் இந்தச் சிக்கல் இன்னும் அதிகம். டேங்க் முழுமையாகக் காலியானால் 'ஏர் லாக்' ஏற்பட்டு, வாகனத்தை எளிதில் இயக்க முடியாது.
இதையும் படிங்க: Tata Motors Results: டிரக் விற்பனை சூப்பர் ஹிட்: டாடா மோட்டார்ஸ் லாபம் 83% உயர்வு, ரூ.2,560 கோடியைத் தொட்டது!
நிபுணர்களின் அறிவுரை
வாகனம் சீராக இயங்க 'கால் பங்கு விதியை' பின்பற்றுமாறு வாகனப் பராமரிப்பு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது, டேங்கில் எரிபொருளின் அளவு கால் பங்காகக் குறையும்போதே அதனை நிரப்பிவிட வேண்டும். ரிசர்வ் விளக்கு ஒளிரும் வரை காத்திருக்கக் கூடாது.
நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளும் முன், செல்லும் வழியில் உள்ள எரிபொருள் நிலையங்களை அறிந்துகொள்வது அவசியம். உற்பத்தியாளர்கள் குறிப்பிடும் ரிசர்வ் மைலேஜை முழுமையாக நம்பக் கூடாது. வாகனம் நமது அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாகும். அதற்கு உரிய நேரத்தில் சரியான பராமரிப்பையும் எரிபொருளையும் வழங்காவிட்டால், அது நடுவழியில் நின்றுவிடும். எனவே, இனிமேல் ரிசர்வ் விளக்கு ஒளிரும்போது ஆபத்தான முடிவுகளைத் தவிர்க்கவும்.