முட்டைகளின் அமைவு
செயற்கையாக அடை காக்கப்படும் முட்டைகள் அவற்றின் அகலமான முனை மேலே இருக்குமாறு வைக்கப்படவேண்டும். இயற்கையாகவே வளரும் கோழிக்குஞ்சுகளின் தலை முட்டையின் அகலமான மேற்பகுதியில் காற்றுப்பைக்கு அருகில் இருக்கும். முட்டைகளை அடைக்கு வைக்கும் போது அவற்றின் குறுகலான முனை மேலே இருக்குமாறு வைத்தால் 60% கோழிக்குஞ்சுகளின் தலை குறுகிய முனையில் வளர்ச்சியடையும்.
எனவே, முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் தருணத்தில் கோழிக்குஞ்சால் தன் அலகைப் பயன்படுத்தி முட்டை ஓட்டினை உடைத்து தன்னுடைய சுவாசத்தைத் துவக்க முடியாது. கிடை மட்டமாக வைக்கப்பட்ட முட்டைகள் அவைகளைக் குறித்த இடைவெளியில் அடிக்கடி திருப்பி விடுவதால் சாதாரணமாக வளர்ச்சி அடையும்.
சாதாரண சூழ்நிலைகளில் முட்டைகளை அவற்றின் அகன்ற மேல்பகுதி மேலே இருக்குமாறு முதல் 18 நாட்களுக்கும், கிடை மட்டமாக கடைசி மூன்று நாட்களுக்கும் வைக்க வேண்டும்.
முட்டைகளைத் திருப்பி விடுதல்
பறவைகள், பொதுவாக கோழிகளும், ஜப்பானியக்காடைகளும் அடைகாக்கும்போது தங்களுடைய கூட்டில் முட்டைகளைத் திருப்பிவிட்டுக் கொள்ளும். இதே போன்றே செயற்கை முறையில் அடைகாக்கும் போது முட்டைகளை ஒரு நாளைக்கு 8 முறை திருப்பி விட வேண்டும்.
அடைகாக்கும்போது முட்டைகளை திருப்பி விடுவதால் வளரும் கரு முட்டை ஓட்டில் ஒரு பக்கமாக ஒட்டிக்கொள்வது தவிர்க்கப்பட்டு கரு இறப்பதும் தடுக்கப்படும். பெரிய வணிக ரீதியான குஞ்சு பொரிப்பகங்களில் உள்ள குஞ்சு பொரிப்பானில் முட்டைகளைத் தானாகவே ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திருப்பி விடப்படும் வசதி இருக்கும்.
பொதுவாக எல்லா முட்டைகளும் செங்குத்தாக 45oகோணத்திலும், பிறகு எதிர் திசையில் 45o கோணத்திலும் திருப்பி விட வேண்டும். 45oக்கு குறைவாக முட்டைகளைத் திருப்பி விட்டால் அதிகப்படியான குஞ்சு பொரிக்கும் திறன் இருக்காது. குஞ்சு பொரிப்பானில் முட்டைகளைத் திருப்ப வேண்டிய அவசியமில்லை.