குழித்தட்டு நாற்று தயார் செய்ய 300 கிராம் எடையுள்ள மஞ்சள் விதைக் கிழங்கு வேண்டும்.
அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும்.
வெட்டிய துண்டுகளின் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு கணு இருப்பது போல வெட்ட வேண்டும்.
வெட்டிய மஞ்சள் துண்டுகளை சூடோமோனஸ், டிரைகோடெர்மாவிரிடி கலந்த கலவையில் 10 நிமிடங்கள் ஊர வைத்து விதை நேர்த்தி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நிழலான பகுதியில் 4 அடி அகலம், 8 அடி நீளம், ஓர் அங்குலம் உயரத்தில் தேங்காய் நார்க்கழிவைக் கொண்டு, படுக்கை அமைத்து ஈரமாக்க வேண்டும்.
அதன் மீது, விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைமஞ்சள் துண்டுகளைப் பரப்பி, அதன் மீது மறுபடியும் தேங்காய் நார்க்கழிவைக் கொண்டு மூடாக்கு போட வேண்டும்.
இதே அளவில் ஐந்து படுக்கைகள் அமைத்தால் ஓர் ஏக்கருக்குப் போதுமான நாற்றுகள் கிடைத்துவிடும்.
தொடர்ந்து 6 நாட்களுக்கு மூடாக்கின் மீது பூவாளி மூலம் தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
ஆறு நாட்களுக்குப் பிறகு, விதைமஞ்சள் முளைக்கத் தொடங்கும். பிறகு, தேங்காய் நார்க்குவியலைப் பிரித்து, விதைமஞ்சளைத் தனியாகப் பிரிக்க வேண்டும்.
பெட் அமைக்க தேவைப்பட்ட அளவு தேங்காய் நார்கழிவை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு வேர் உட்பூசணம் ஒரு கிலோ, சூடோமோனஸ் ஒரு கிலோ, டிரக்கோடெர்மாவிர்டி ஒரு கிலோ, பெசிலோமேசிஸ் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து, குழித்தட்டில் உள்ள குழிகளில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு நிரப்ப வேண்டும்.
இதன் மீது விதைமஞ்சளின் முளைக்கட்டிய பகுதி மேலே இருக்குமாறு வைத்து, மஞ்சளைச் சுற்றி நார்க் கலவையை நிரப்ப வேண்டும். ஒரு குழித்தட்டில் 98 குழிகள் இருக்கும்.
ஒரு ஏக்கருக்கு 350 குழித்தட்டுகளைத் தயார் செய்ய வேண்டும். பிறகு, தட்டுகளில் தண்ணீர் தெளித்து பத்து பத்து தட்டுகளாக அடுக்கி, நிழலான பகுதியில் வைத்து. . பாலித்தீன் கவரைக் கொண்டு காற்றுப் புகாதவாறு ஏழு நாட்கள் மூடி வைக்க வேண்டும்.
எட்டாம் நாள் தட்டுகளைத்தனித்தனியாகப் பிரித்து மர நிழலில் 25 நாட்களுக்கு வைத்து தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும்.
இப்படித் தனியாக வைத்து 5-ம் நாள் ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி, வீதம் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்து தெளிக்க வேண்டும்.
10-ம் நாள் இதேபோல பஞ்சகவ்யா கரைசலைத் தெளிக்க வேண்டும்.
15-ம் நாள் கரிம உட்டச் சத்துக்கரைசலை இதேபோலத் தெளிக்க வேண்டும்.
20-ம் நாள் ஜீவாமிர்தக் கரைசலைத் தெளிக்க வேண்டும்.
25-ம் நாளைக்கு தண்ணீர் விட வேண்டும். 25-ம் நாட்களுக்கு மேல் சூடோமோனஸ் கரைசலைத் தெளித்து நாறுகளைப் பிரித்து வயலில் நடவு செய்யலாம்.