வெள்ளாடுகளின் வைட்டமின் தேவையை இப்படியும் பூர்த்தி செய்யலாம்...

 |  First Published Dec 4, 2017, 12:50 PM IST
You can fill the diet of goats ...



வைட்டமின்கள் தேவை

அசைபோடும் விலங்கினங்களுக்கு மற்ற உயிரினங்களைப் போன்று எல்லாவித வைட்டமின்களும் உணவில் அளிக்கத் தேவை இல்லை. பெரு வயிற்றிலுள்ள நுண்ணுயிர்கள் வெள்ளாடுகளுக்கு வேண்டிய பி.காம்பிளக்ஸ் வைட்டமின்களைத் தயாரித்து விடுகின்றன. மேலும் பெரு வயிற்றுலுள்ள செல்கள் “சி” வைட்டமினை உற்பத்தி செய்து விடுகின்றன.

வெள்ளாடுகள் சூரிய ஒளி மூலம் தோலிலுள்ள கொழுப்புச் சார்ந்த பொருட்களைக் கொண்டு வைட்டமின் “டி” தயாரித்துக் கொள்கின்றன. அத்துடன் வெயிலில் காய்ந்த புல், தழைகள் மூலமும் இவ்வைட்டமினைப் பெற்றுக் கொள்ளுகின்றன.

வெள்ளாட்டுகளுக்கு மிகவும் தேவையான வைட்டமின், வைட்டமின் “ஏ” ஆகும். நன்கு பசுந்தழை, புல் உண்ணும் வெள்ளாடுகள் இச்சத்துகளினால் பாதிக்கப்படுவதில்லை.

சாதாரணமாக வெள்ளாடுகள் எவ்வளவு தீவனம் உண்ணும்? எவ்வகைத் தீவனத்தை எவ்வளவு, எவ்வாறு கொடுக்க வேண்டும்? என்பது குறித்து விவாதிக்கலாம். அதற்கு முன் வெள்ளாடு வளர்ப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது. வெள்ளாடுகளுக்குத் தீவனம் அளிப்பது ஓர் அறிவியல் மட்டுமல்ல. அது ஒரு கலை. 

ஆகவே இங்குத் தீவனம் அளிப்பது குறித்துத் தோராயமாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆடு வளர்ப்போர் தங்களது திறமையைப் பயன்படுத்தி ஆட்டின் தேவையை அறிந்து தீவனம் அளித்துப் பயன் பெற வேண்டும்.

வெள்ளாடுகளின் தீவனம் தேவை மிக அதிகமாகும். சாதாரணமாக மாட்டினம் தனது உடல் எடையில் 1.5 முதல் 2.0% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும். ஆனால் வெள்ளாடுகள் தனது உடல் எடையில் 2 முதல் 5% தீவனம் ஏற்கும். ஆகவே வெள்ளாடுகள் கடும்பசி கொண்ட விலங்கினமாகக் கொள்ளலாம். வெள்ளாடுகளுக்குச் செம்மறி ஆடுகளைவிட இரு மடங்கு கொண்ட பெரு வயிறு உள்ளது. 

இதன் காரணமாகவே, வெள்ளாடுகள் பசுந்தழை மற்றும் புல்லை மட்டும் உண்டு வளர்ச்சியடைந்து பாலும் கொடுக்க முடிகின்றது. மேலும், குளிர் நாட்டைச் சேர்ந்த வெள்ளாடுகள் அதிகத் தீவனம் ஏற்கும். வெப்ப நாடுகளில் உள்ள ஆடுகள் குறைவாகவே தீவனம் ஏற்கும். இதனட காரணமாகவே குளிர்ப் பகுதி ஆடுகளுக்கு அகன்ற உடம்பும், வெப்ப நாட்டு ஆடுகள் ஒடுங்கிய உடலமைப்பும் கொண்டுள்ளன.

அடுத்து வெள்ளாடுகளின் சுவை உணர்வு அலாதியானது. வெள்ளாடு தின்னாது ஒதுக்கும் பசுந்தீவனம் சில மட்டுமே. மேலும் ஆடுகளுக்கு ஒரே வகைத் தழையோ, புல்லோ தொடர்ந்து கொடுக்கக் கூடாது. சில வகையான தழைகளைக் கலந்து கொடுப்பதே சத்துக்குறைவைத் தீர்க்கச் சிறந்த வழியாகும். 

மேலும் புதுவகைத் தீவனங்கள் கொடுக்கும் போது, சிறிது சிறிதாகப் பழக்கப்படுத்திய பின் ஏற்ற அளவு கொடுக்க வேண்டும். பெரு வயிற்றிலுள்ள நுண்ணுயிர்கள், பொதுப்படையாகவே சில இனங்களைச் சார்ந்ததாயினும், அவற்றின் எண்ணிக்கை மற்றும் வகைகள் மாறுபட்ட நிலையில் இருக்கும். அப்பகுதியின் தீவனமும் இம்மாறுபாட்டிற்குக் காரணமாகும்.

வெள்ளாடுகள் தீவனத்தை அதிக அளவில் விரயம் செய்யும் குணமுடையவை. தொட்டியில் மற்றும் கூடையில், தழையைப் போடும் வேளையில் அவற்றை இழுத்துத் தரையில் வீசி உண்ணத் தொடங்கும். ஆனால், தரையில் விழுந்து மிதிபட்ட தீவனத்தை உண்ணாது வீணாக்கும். ஆகவே, தீவனத் தொட்டி அடைப்பு வைப்பது அவசியம். சிறிய அளவில், வளர்க்கும் போது தழையைக் கொட்டகைக்காலில் கட்டி வைக்க வேண்டும். இதனால், தீவனம் வீணாவது தவிர்க்கப்படும்.

மேலும் வெள்ளாடுகளுக்கு மூன்று முதல் ஐந்து முறையாக தீவனத்தைப் பிரித்துப் பல்வேறு வேளையில், கொடுத்தால் அதிகம் வீணாக்காமல் தின்னும். அடுத்த ஒருமுறையாவது, காய்ந்த தழை அல்லது புல் கொடுக்க வேண்டும் இவ்வாறாக வெள்ளாடுகளுக்குத் தீவனம் மூன்று வகையில் வழங்க வேண்டும். (1) பசுந்தழை மற்றும் புல் (2) காய்ந்த தழை மற்றும் புல் (3) கலப்புத் தீவனம் ஆகிய மூன்று வகையாக வழங்கலாம். 

click me!