நச்சுத் தாவரங்கள்
1.. அரளி
தமிழ்நாடு எங்கும் உள்ள இது மிகக் கொடிய நச்சுத் தாவரம். ஆனால் பல வண்ணங்களில் பூக்கும் பல வகைகள் உண்டு.
அடுக்கு அரளி, ரோசாப்பூ போன்று அழகாகப் பூக்கும். பலர் வீட்டுத் தோட்டங்களில் அழகுக்காக வளர்ப்பார்கள்.
ஆனால் அரளி எவ்வளவு நச்சுத் தன்மை கொண்டது என்றால் 5 கிராம் காய்ந்த தழை ஒரு மாட்டையே கொல்லவல்லது.
அரளியை ஆடு சாப்பிடுமா? சாப்பிடவே சாப்பிடாது. அப்படியானால் அரளியினால் ஆபத்து இல்லையே! உண்மையில் அரளியால் ஆடுகளுக்கு ஆபத்து சுற்று வழியில் ஏற்படும்.
அரளிகள் அவ்வப்போது வெட்டி விடப்படும்போது அதன் இலைகள் காய்ந்து நிலத்தில் விழும்.
கோடைக் காலங்களில் காய்ந்த அரளி இலைகள், பிற காய்ந்த தீவனத் தழையுடன் கலந்து விடும்போது ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
சில பண்ணைகளில் காரணம் தெரியாது ஏற்படும் இறப்புகளுக்கு அரளி இலைகளே காரணமாக அமைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
2.. பாலச்செத்தை
திருச்சி, திண்டுக்கல், பெரியார் மாவட்டப் பகுதிகளில் மழைக் காலத்தில் மேய்ச்சல் தரையில் முறைத்து வளரும் நச்சுத் தாவரமாகும்.
இது ஆடு மாடுகளில் கழிச்சல் மற்றும் நரம்புச் சம்பந்தமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தாவரத்தை மேய்ந்து பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்குச் சிகிச்சை அளித்து அவற்றைக் குணப்படுத்த முடியும் என்றாலும், மேய்ச்சல் நிலங்களிலிருந்து இச்செடிகளை அகற்றுவதே சிறந்தது.
மேலும், மேய்ச்சல் தரையில் இதன் வளர்ச்சி அதிகமாக இருந்தால் அப்பகுதிக்கு ஆடுகளை மேய விடுவதைத் தவிர்ப்பதே ஏற்ற நல்ல முறையாகும்.
3.. லாண்டனா
இச்செடி மண் அரிப்பைத் தவிர்க்கவும், ஓர் அலங்காரச் செடியாகவும் கொண்டு வரப்பட்டதாகும்.
தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளிலும், மற்றப் பகுதிகளிலும் கூட இவை வளர்ந்திருப்பதைக் காணலாம்.
இச்செடிகளில் சிறு முட்கள் இருக்கும். மஞ்சள், சிவப்பு, வெள்ளை மலர்கள் சிறு செண்டு போல் அழகிய தோற்றத்துடன் காணப்படும்.
வறட்சிக் காலங்களில் ஆடுகள் இத்தழையை உண்டு பாதிப்பிற்குள்ளாகும். இதனால் ஆடுகள், தோல் சொறியினால் (Photo Sensetization) பாதிக்கப்படுவதுடன், கடுமையாகக் குடல் உறுப்புகளும் தாக்கப்படும்.
வயிறு மற்றும் குடல் நரம்புகள் பாதிக்கப்பட்டுச் செரிமானத்தைப் பாதிக்கும். தொடர்ந்து இத்தழையை மேய்ந்தால் இறப்பு ஏற்படும். ஆடு, மாடுகள் இத்தழையை மேயாமல் தடுப்பதே சிறந்தது.
4.. நெய்வேலி காட்டாமணக்கு / காட்டாமணி
இது எக்காளச்செடி எனவும் அழைக்கப்படும். பெரிய ஊதா நிறம் கலந்த வெள்ளைப்பூக்களுடனும், பெரிய இலைகளுடனும் காணப்படும்.
அழகுக்கென்றும், பசுந்தாள் உரத்திற்கு என்றும் அறிமுகப்படுத்தப்பட்ட இச்செடி பெரும் பிரச்சனைகளை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது.
இது ஏற்படுத்தும் பெரும் பிரச்சனைகளைத் தஞ்சாவூர் மாவட்டத்தில் காணலாம். வாய்க்கால்களைப் பெரும் அளவில் மூடி நீரோட்டத்தைத் தடுக்கிறது. ஆடுகளுக்கும் பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
சில ஆடுகள் இத்தழையை உண்பதில்லை. ஆனால், சில ஆடுகள் தாராளமாக மேய்ந்துவிடும். சிறப்பாகப் புதிதாகத் தஞ்சைப் பகுதிக்குக் கொண்டு வரப்படும் ஆடுகள் முழுவதுமாக இத்தழையை மேய்ந்து மாண்டு போகும்.
முன்பு தஞ்சையில் தலைச்சேரி, சமுனாபாரி இனக்கடா ஆடுகளை அவ்வூர் மக்கள் வாங்கிய சூழ்நிலையில் அவை பல இறந்துவிட நேர்ந்தது.
இத்தழையில் கழிச்சலை உண்டாக்கும் நச்சுப்பொருளும் இரத்த அணுக்களை அழிக்கும் நச்சுப் பொருளும், நரம்புகளைத் தாக்கும் நச்சுப் பொருளும் உண்டு. இதனால் இத்தழையை அதிக அளவில் ஏற்கும் வெள்ளாடுகள் இறந்துவிடும். சிறிய அளவில் மேய்ந்துவிடும் ஆடுகளுக்குச் சிகிச்சை அளித்துக் குணமாக்கலாம்.
இத்தழை உள்ள பகுதிகளில் மேய அனுமதிக்காமல் இருப்பதே சிறந்த பாதுகாப்பு முறையாகும். முக்கியமாகப் புதிதாக வாங்கிய வெள்ளாடுகளைப் பொருத்த மட்டில் மிகக் கவனம் தேவை.