தர்பூசணி சாகுபடி செய்ய விருப்பமா? இந்த முறையில் சாகுபடி செய்து அதிக மகசூலை பெறுங்க…

 |  First Published Jun 21, 2017, 3:19 PM IST
Want to cultivate watermelon? In this method you will get high yields of cultivation ...



சிட்ரல்லூஸ் லனாடஸ் என்ற தாவரவியல் பெயரைக் கொண்டுள்ள தர்பூசணியை சாகுபடி செய்யும் முறை:

ரகங்கள்:

Tap to resize

Latest Videos

பி.கே.எம். 1, சுகர்பேபி, அர்காமானிக், டிராகன் கிங், அர்கா ஜோதி, அர்கா ஜஸ்வர்யா, அம்ருத் அபூர்வா, பூசா பெடானா, புக்கிசா, மைதிலா (மஞ்சள்), தேவயானி (ஆரஞ்சு) ஆகிய தர்பூசணி ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

ஏற்ற மண் மற்றும் பருவம்

அங்ககச் சத்து நிறைந்த, வடிகால் வசதியுள்ள, 6.5 முதல் 7.5 வரைய கார அமிலத்தன்மை கொண்ட மணற்சாரி நிலம் தர்பூசணிக்கு ஏற்றது.

ஜனவரி முதல் மார்ச் வரை தர்பூசணி சாகுபடி செய்யலாம்.

விதைப்பு

நன்கு உழுது எட்டு அடி அகலப்பார் அமைத்து, பார்களுக்கிடையில் கால்வாய் பிடிக்க வேண்டும். ஏக்கருக்கு ஒன்றரை கிலோ விதை தேவைப்படும். கால்வாயை ஒட்டி மூன்று அடி இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். குத்துக்கு இரண்டு செடி இருக்குமாறு, விதைத்த 15-ஆம் நாள் கலைத்துவிட வேண்டும்.

விதை நேர்த்தி

விதைகளை ஊன்றுமுன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின்னர் வாரம் ஒருமுறை நீர்பாய்ச்ச வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது, நீர்ப் பயன்பாட்டைச் சிக்கனமாக்கி நிறைவான மகசூல் பெற உதவும். அடியுரமாக ஏக்கருக்கு 10 டன் தொழு உரமிட வேண்டும்.

மேலும் ஏக்கருக்கு 22 கிலோ மணிச்சத்து தரவல்ல 140 கிலோ சூப்பர் பாஸ்பேட், 22 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 40 கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை அடியுரமாக இட வேண்டும்.

விதைத்த 30ஆம் நாள் 22 கிலோ தழைச்சத்து தரவல்ல 50 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும். எத்தரல் வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் நீருக்கு இரண்டரை மி.லி. அளவில் கலந்து, விதைத்த 15ஆம் நாள் முதல் வாரத்திற்கு ஒருமுறை என நான்கு முறை தெளித்து மகசூலை அதிகரிக்கலாம்.

பயிர்ப் பாதுகாப்பு: 

 

வண்டுகளை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மி.லி. மாலத்தியான் 500 ஈ.சி. தெளித்து கட்டுப்படுத்தலாம். நன்கு உழவு செய்து பழ ஈயில் கூட்டுப் புழுக்களை வெளிப்படுத்தி அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும்.

இப்பழ ஈயின் தாக்குதல், வெப்பக் காலத்தில் மிகக் குறைவாகவும், மழைக் காலத்தில் மிக அதிகமாகவும் இருக்கும். எனவே, அதற்கேற்ப விதைப்பு தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

கருவாட்டுப் பொறி

ஒரு பாலித்தீன் பையில் 5 கிராம் நனைந்த கருவாடு, ஒரு மி.லி. டைக்குளோர்வாஸ் நனைந்த பஞ்சு வைத்து கருவாட்டுப் பொறிகளை ஏக்கருக்கு இருபது என்ற அளவில் வைத்து பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.

20 நாள்களுக்கு ஒரு முறை நனைந்த கருவாடும், வாரத்திற்கு ஒரு முறை டைக்குளோர்வாஸ் நனைந்த பஞ்சும் மாற்ற வேண்டும்.

லிண்டேன் பூச்சிக் கொல்லி மற்றும் தாமிர, கந்தகப் பூசணக் கொல்லிகள் தாவரநச்சாகப் பயிரைப் பாதிப்பதால் அவற்றை உபயோகிக்கக் கூடாது.

மகசூல்

120 நாள்களில் ஏக்கருக்கு 15 டன் மகசூல் எடுக்கலாம்.

விவசாயிகள் இந்த தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து, தர்பூசணியை சாகுபடி செய்து, உயர் மகசூலும் லாபமும் பெறலாம்

click me!