திட மற்றும் திரவ வள மேலாண்மை மையங்களில் உற்பத்தியாகும் உயிர் உரங்களை பயன்படுத்தி இயற்கை வேளாண்மை முறையில் கூரைத் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
8000 சதுர அடியில் 1200 மூங்கில் கூடைகளில் கீரை வகைகள், தக்காளி, கத்தரி, முள்ளங்கி, வெங்காயம், பீட்ரூட், பாகற்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறி வகைகள், சோற்றுக்கற்றாழை, தூதுவளை போன்ற மருத்துவ உணவு பொருட்கள் பயிரிடப்படுகின்றன.
இந்த கூரைத் தோட்டத்தை பராமரிக்க மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 10 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு விளையும் காய்கறிகளை விற்று கிடைக்கும் வருமானத்தை அவர்கள் தங்களது சம்பளமாக பிரித்துக் கொள்கிறார்கள்.
சராசரியாக தலா ஒருவருக்கு தினமும் ரூ.150 வருமானமாக கிடைக்கிறது. மேலும், இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை விற்பனை செய்ய ஊராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.5 இலட்சம் மதிப்பில் 400 சதுர அடி பரப்பளவில் அங்காடி கட்டடம் அமைப்பதற்கான கட்டுமான பணியும் நடந்து வருகிறது.
கூரைத்தோட்டம் அமைக்க மூங்கில் கூடைகள் வேண்டும்.
அந்த கூடைகளை சாணத்தால் நன்றாக மெழுகி, கூடைகளில் இருக்கும் துவாரங்களை முதலில் அடைக்க வேண்டும்.
பின்பு, பயிரிடப்படும் காய்கறிக்கு ஏற்ற மண் அதில் நிரப்ப வேண்டும்.
தென்னை மஞ்சி, இயற்கை உரங்கள் அந்த மண்ணில் கலந்து பின்பு காய்கறிகள் விளைவிக்கலாம்.
இதற்கு தேவையான தண்ணீர் மேல் கூரையில் டேங்க் மூலமாக சேமிக்கலாம்.
மட்கும் குப்பைகளை கொண்டு உரங்கள் தயாரிக்கலாம்.
இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்படுதால், இங்கு விளையும் காய்கறிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
சந்தை, காய்கறி கடைகளில் விற்கப்படுவதை விட 10 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டாலும், இரசாயன கலப்பில்லாத இந்த காய்கறிகள், கீரைகளை அவர்கள் விரும்பி வாங்குவார்கள்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போர், தோட்டம் அமைக்க இடமில்லாதவர்கள் தங்களது வீட்டு கூரையில் தோட்டம் அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.