குறைந்த நீர் ஆதாரத்தில் வளரக்கூடியது மூங்கில். சேர்வராயன் மலை, கொல்லிமலை, கல்வராயன்மலை, சத்தியமங்கலம், முதுமலை, பொள்ளாச்சி, மேற்கு தொடர்ச்சி மலை தெற்கு பகுதியில் பயிரிடப்படுகிறது.
இந்த மூங்கிலை தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், கோவை, வேலூர், தேனி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தாராளமாக வளர்க்கலாம்.
மூங்கில்கள் வளர்ந்தவுடம் விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப வெட்டி விற்பனை செய்து கொள்ளலாம். அவற்றிற்கு நல்ல மவுசும் உண்டு.
எப்படி வளர்ப்பது?
கன்று உற்பத்தி:
பொதுவாக மூங்கில் இனப்பெருக்கம் மூன்று வழிகளில் செய்யலாம். 1. விதை மூலம், 2. கணுக்கள் வேர் அடிக்கச் செய்து, வேர் செடியாக உபயோகப்படுத்துவது, 3. திசு வளர்ப்பு முறை.
ஏற்ற மண் வகை:
எல்லா வகை மண்ணிலும் மூங்கில் சாகுபடி செய்யலாம். இரு மண்நிலம், செம்மண் நிலம் ஏற்றது. மோசமான மண்ணாக இருந்தால் குழி வெட்டி அதில் செம்மண் நிரப்பி, அதில் சாகுபடி செய்யலாம்.
நடவு:
நடவு இடைவெளி 13’x13′. ஒரு ஏக்கருக்கு 250 கொத்துக்கள். நடும் குழியின் அளவு: 3′ x 3′ x 3′. மூங்கில் நடவிற்கு குழி வெட்டுவதற்கு முன் நிலத்தின் உள்ளே நன்கு மழைநீர் இறங்குவதற்கு உழவு செய்வது அவசியம். கன்றுகளை மழைகாலத்தில் நடவு செய்ய வேண்டும்.
உரம்:
குழிக்கு 10 கிலோ தொழு உரம், 2 கிலோ மக்கிய தென்னை நார்க்கழிவு, 2 கிலோ மண் புழு உரம், 50 கிராம் வேம், 20 கிராம் அசோஸ்பைரில்லம், 20 கிராம் பாஸ்போ பாக்டீரியா, 20 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர்பாசனம் மிகச் சிறந்தது.
ஊடுபயிர்:
மூங்கிலில் ஊடுபயிராக வாழை, மரவள்ளி, பயிர்வகை பயிர்கள், காய்கறிகள் சாகுபடி செய்யலாம். மூங்கில் கன்றுகளை நன்கு பராமரித்தால் ஏக்கருக்கு 50 டன் மகசூல் கிடைக்கும்.
கன்று நட்ட முதல் ஆண்டில் 175 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 200 கிலோ பொட்டாஷ் இடவேண்டும். இயற்கை உரம், மண்புழு உரம் இடவேண்டும்.
மூன்றாம் ஆண்டு முதல் ஏக்கருக்கு 700 கிலோ யூரியா, 200 கிலோ டிஏபி, 600 கிலோ பொட்டாஷ் இடவேண்டும். நீர்பாசனம் ஒரு கொத்திற்கு 100 லிட்டர் செய்ய வேண்டும்.
அறுவடை:
நட்ட ஆறாம் ஆண்டு முதல் முற்றிய கழிகளை வெட்ட வேண்டும். அதற்கு பிறகு ஆண்டுதோறும் ஒரு முறை தொடர்ந்து மூங்கில் சாகும் வரை அறுவடை செய்யலாம். இளங்கழிகளை வெட்டக்கூடாது. கழிகளை முதல் கணுவிற்கு மேல் ஒட்ட வெட்ட வேண்டும். அடிக்கிழங்கினை எக்காரணம் கொண்டும் தோண்டக்கூடாது.
வரவு, செலவு:
ஆறாம் ஆண்டில் ஒரு கொத்தில் 8 கழிகளை வெட்ட முடியும். 350 * 8 = 2800. ஒரு கழி ரூ.50/- வீதம் ரூ.1,20000/- அதிக பட்சமாக செலவு ரூ.20,000/- முதல் ரூ.25,000/-. நிகர லாபம் ரூ. 90 ஆயிரம்.
இதைத்தவிர இளம் குருத்துக்களை பதப்படுத்தி உணவாக விற்பனை செய்யலாம். சருகுகளை மண்புழு உரமாக மாற்றி விற்பனை செய்யலாம்.
இப்படி செய்தால் மூங்கில் மூலம் லாபத்தை அள்ளலாம்.