கரும்பு சாகுபடி உத்திகள்
இரகங்கள் மற்றும் பருவங்கள்
கரும்பு பொதுவாக டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று பட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்படுகின்றது.
இது தவிர ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை தனிப்பட்டமாக கரும்பு நடவு செய்யப்படுகிறது.
பருவத்திற்கு ஏற்ப பட்டங்கள்
முன்பட்டம் - டிசம்பர் – ஜனவரி
நடுப்பட்டம் - பிப்ரவரி – மார்ச்
பின்பட்டம் - ஏப்ரல் – மே
தனிப்பட்டம் - ஜீன் – ஜீலை
நடவு வயல் தயாரிப்பு
1.. களிமண் நிலம்
பொதுவாக களி மண் வயல்களில் நல்ல பொலபொலப்புத் தன்மை பெறும் வகையில் உழவு மேற்கொள்ள முடிவதில்லை
நெல் அறுவடைக்குப் பிறகு வயலின் குறுக்காகவும் வயலைச் சுற்றியும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் பாத்திகள் 6 மீட்டர் இடைவெளியில் 40 செ.மீ.ஆழம் மற்றும் 30 செ.மீ. அகலத்தில் அமைத்திட வேண்டும்
நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் மண்வெட்டி கொண்டு அமைத்திட வேண்டும்
நடவு சாலினை 4 முதல் 5 நாட்கள் வரையிலும் களைகொத்தி கொண்டு கிளறி விடுதல் வேண்டும்
அதிக தண்ணீர் தேங்கி பிரச்சினையாகும் நிலங்கள்
அதிகமாக தண்ணீர் தேங்கி நின்று மற்றும் அதனை வடித்து வெளியேற்ற முடியாத வயல்களில் 30 செ.மீ.இடைவெளியில் 5 மீட்டர் நீளம், 80 செ.மீ. அகலம் மற்றும் 15 செ.மீ. உயரம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்திட வேண்டும்.
2.. இருமண் மற்றும் மணல்சாரி தோட்டக்கலை நிலங்கள்
ஆரம்பத்தில் இரண்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும். தொடர்ந்து எட்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும் மற்றும் உழும் கருவி பயன்படுத்தி ஆழ உழ வேண்டும்.
தொடர்ந்து ஒரு முறை சுழல் கலப்பை கொண்டு மண்ணை பொலபொலப்பாக்கி பண்படுத்துவதன் மூலம் களை மற்றும் பயிர்தூர் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
சீரான முறையில் நீர்ப்பாசனம் செய்திட நிலத்தினை நன்கு சமன்படுத்த வேண்டும்
நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் விக்டரி அல்லது பார் அமைக்கும் கலப்பை கொண்டு அமைக்க வேண்டும்.
நடவு சால்கள் 20 செ.மீ. ஆழம் உடையதாக இருத்தல் வேண்டும் நீர்ப்பாசன வாய்க்கால்கள் 10 மீட்டர் இடைவெளியில் இருத்தல் வேண்டும்
3.. அடியுரமாக அங்கக உரங்கள் இடுதல்
தோட்டக்கால் நிலங்களில் கடைசி உழவிற்கு முன்னதாக தொழுஉரம் 12.5 டன்/ எக்(ஆழ் குப்பை உரம் 25 டன்/ எக்(அ) ஆலை அழுக்கு 37.5 டன்/ எக் என்ற அளவில் இட வேண்டும்.
களி மண் நிலங்களில் மேற்கண்ட அங்கக உரங்களை நடவு சால்களில் இட்டு நன்கு கலந்து விடவேண்டும்.
கரும்புத் தோகை மற்றும் ஆலை அழுக்கு கொண்டு ஊட்டமேற்றிய குப்பை எரு தயாரித்தல்
காய்ந்த கரும்புத் தோகையை 15 செ.மீ. உயரத்திற்கு சுமார் 7 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலப் பாத்திகளாக பரப்பவும். அதற்கு மேல் 5 செ.மீ. உயரத்திற்கு கரும்பு ஆலை அழுக்கினை பரப்பி விடுதல் வேண்டும்.
மசூரி ராக் பாஸ்பேட், ஜிப்சம் மற்றும் யூரியா உரங்களை முறையே 2:2:1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து தோகை மற்றும் ஆலை அழுக்கு அடுக்கின் மீது 100 கிலோ தோகைக்கு 5 கிலோ உரக்கலவை என்ற விகிதத்தில் பரவலாகத் தூவி விட வேண்டும்.
பின்னர் அடுக்கு முழுவதும் நன்கு நனையும் வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள இடுபொருள்கள். ஒவ்வொன்றையும் அதே அளவில் மற்றும் அதே முறையில் திரும்பவும் கொடுத்து கடைசியாக அடுக்கின் மொத்த உயரம் 1.5 மீட்டர் அளவு வருமாறு செய்ய வேண்டும்.
தண்ணீர் தெளிப்பதற்கு பதிலாக கிடைக்கும் இடங்களில் தொழு உரக் கரைசல் பயன்படுத்தலாம். பின்னர் அடுக்கு முழுவதையும் மண் மற்றும் ஆலை அழுக்கு முறையே 11 என்ற விகித அளவில் கலந்த கலவை கொண்டு 15 செ.மீ. உயர அளவிற்கு மூடி விட வேண்டும். இவ்வடுக்கினை மூன்று மாதத்திற்கு மக்குவதற்காக அப்படியே விட்டுவிட வேண்டும்.
15 நாட்களுக்கு ஒரு முறை அடுக்கு முழுவதும் நனையும் வண்ணம் நீர் தெளிக்க வேண்டும். மூன்று மாதமானதும் அடுக்கினை புரட்டி பின்னர் நன்கு கலந்து விட்டு ஒரு மாதத்திற்கு அப்படியே விட வேண்டும்.
நான்காவது மாத முடிவில் மறுபடியும் புரட்டி விட்டு பின் கலந்து 5வது மாத முடிவு வரை 15 நாள் இடைவெளியில் தண்ணீர் தெளிக்க வெண்டும்.
இம்முறையில் தயாரிக்கப்படும் கரும்புத்தோகை கம்போஸ்டில் தழை, மணி மற்றும் கால்சியம் சத்துக்களின் அளவு அதிகமாக இருப்பதோடு கரிமம் மற்றும் தழைச்சத்தின் விகிதாச்சாரம் கரும்புத் தோகையின் அளவை விட 10 மடங்கு குறைவாக இருக்கும்.
4.. வறட்சி நிர்வாகம்
கரும்பு விதைக்கரணைகளை 80 கிலோ நீர்த்த சுண்ணாம்புடன் 400 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் 1மணி நேரம் ஊறவைத்தல்.
30 செ.மீ. ஆழமான நடவு சால்களில் கரணைகளை நடவு செய்தல்.
பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சத சரைசலை வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்தல்.
6 சத கயோலின் (60 கிராம் கயோலின் 1 லிட்டர் தண்ணீருக்கு) தெளித்து நீர்த்தேவையினைக் குறைத்தல்.
தண்ணீர் தட்டுப்பாடான பகுதியில் மாறுசால் அல்லது விடுசால் பாசனம் நன்மைக்குறியதாகும் .
நடவு செய்த 120ம் நாள் கூடுதலாக 125 கி பொட்டாஷ் / எக் என்ற அளவில் இட வேண்டும்.
கடைசி உழவின் பொழுது தென்னை நார்க்கழிவு 25 டன்/ எக் என்ற அளவில் இடுதல்.
காய்ந்த சோகைகளை 5வது மாதம் உரித்து கரும்பு வரிசைக்கு இடையே பரப்புதல்
5.. வறட்சி மேலாண்மை
நீர் பற்றாக்குறையை சரிகட்ட எத்தரல் 200 பி.பி.எம். அல்லது சுண்ணாம்புக் கரைசல் (80 கிலோ சுண்ணாம்பை 400 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) போன்றவற்றில் விதைக்க கரணைகளை ஒரு மணி நேரம் நனைத்து வைத்திருந்த 30 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.
பின்பு நீர் பற்றாக்குறை காலங்களில் பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சதவிகித கரைசல் ஒவ்வொன்றையும் 15 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) கரைசலை தெளிப்புச் செய்ய வேண்டும்.
நீர்ப்பற்றாக்குறையான சூழ்நிலைகளில் மாற்று சால் மற்றும் சால் விட்டு சால் பாசன முறைகளைக் கையாளுவது நன்மை பயப்பனவாக அமைகிறது.
6.. அறுவடை நேர்த்திகள்
முன்பட்ட கரும்பு இரகங்களை 10 முதல் 11 மாதத்திற்குள்ளும் பின்பட்ட இரகங்களை 11 முதல் 12 மாதத்திற்குள்ளும் அறுவடை செய்ய வேண்டும்.
கரும்பினை அதன் உச்ச கட்ட முதிர்ச்சி காலத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
அறுவடை செய்யும்போது நடவுப் பயிராக இருந்தாலும் அல்லது மறுதாம்புப் பயிராக இருந்தாலும் தரையோடு தரையாக பூமி மட்டத்திற்கு அறுவடை செய்ய வேண்டும்