நாட்டுக்கோழிகள்
நாட்டுக் கோழிகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த மண்டலக் கோழியினப் பண்ணைகள், இந்திய வேளாண் மற்றும் கால்நடைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவை பல்வேறு வகையான கோழியினங்களை உற்பத்தி செய்துள்ளன.
இருவகைப் பயன்பாட்டுள்ள வெளிநாட்டுக் கோழிகளின் மரபணுப் பண்புகளை, உளநாட்டுக் கோழியினத்தின் மரபணுப் பண்புகளுடன் சேர்த்துத் தரம் உயர்த்தப்பட்ட கோழியினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டுக் கோழியினங்களின் தேவை அதிகரித்து வருவதோடு, தரம் உயர்த்தப்பட்ட பல வண்ண இறைச்சிக் கோழிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இக்கோழிகளின் எண்ணிக்கை மொத்தக் கோழிகளின் எண்ணிக்கையில் 5.7 விழுக்காடாகும்.
தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழிகளின் பண்பு நலன்கள்
** பல வண்ணங்களில் காணப்படும் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழிகள் காண்பவரின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.
** குறைந்த செலவிலான கொட்டகை அமைப்பு, சத்துகள் குறைந்த தீவனம் மற்றும் பராமரிப்பு முறைகளிலும் நன்கு வளரக்கூடியவை.
** அடைகாக்கும் குணம் காணப்படுவதில்லை. எனவே அதிக முட்டைகளிடும்.
** தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சியில் உள்ள ஊட்டச் சத்துகள் நாட்டுக்கோழியைப் போன்றே இருக்கும்.
** குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட இக்கோழி இறைச்சியை வயோதிகர்களுக்கும் ஏற்றது.
** அதிக நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளும் இயல்பு கொண்டவை. தரம் குறைந்த புரதம் மற்றும் எரிசக்தி கொண்ட தானியங்களை உட்கொண்டு முட்டையிடும் திறன் கொண்டவை.
** அதிக நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் நீண்ட காலம் உயிர் வாழும் தன்மை கொண்டவை.
** நாட்டுக் கோழிகளின் முட்டையை விட அதிக எடையையும் அதிக கறுவுறும் மற்றும் குஞ்சு பொரிக்கும் திறன் கொண்டவை.