மண்புழு உரம் தயாரிக்க இத்தனை படிகள் இருக்கு; அவசியம் தெரிந்து கொண்டு பயனடையவும்...

 
Published : Sep 09, 2017, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:09 AM IST
மண்புழு உரம் தயாரிக்க இத்தனை படிகள் இருக்கு; அவசியம் தெரிந்து கொண்டு பயனடையவும்...

சுருக்கம்

There are so many steps to produce vermicompost Know what you need

படி – 1

மட்கக்கூடிய கழிவுகளை சேகரித்தல், சிறு சிறு துண்டுகளாக மாற்றுதல், உலோகம், கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்களை பிரித்து எடுத்தல்.

படி – 2

மட்கக்கூடிய கழிவுகளை மூட்டம் போட்டு, அதில் சாணக்கரைசலை தெளித்து, 20 நாட்களுக்கு மக்கவிடுதல். இவ்வாறு 20 நாட்கள் மட்கிய கழிவுகள் மண்புழு சாப்பிடுவதற்கு ஏதுவாக இருக்கும். நன்றாக உலர்ந்த கால்நடை கழிவுகளையும், சாண எரிவாயுக் கழிவுகளையும் மட்டுமே மண்புழு உரம் தயாரிக்க நேரடியாக உபயோகிக்கலாம்.

படி – 3

மண்புழு உரப்படுக்கை தயாரித்தல். மண்புழு உரம் தயாரிக்க கடின தரை மிகவும் அவசியம். தரை மிருதுவாக இருந்தால் மண்புழு மண்ணுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மண்புழு படுக்கையில் தண்ணீர் விடும் பொழுது, கரையக் கூடிய சத்துக்கள் எல்லாம் நீரில் கரைந்து மண்ணுக்குள் சென்றுவிடும்.

படி – 4

மண்புழு உரம் தயாரித்த பின்பு மண்புழுக்களை பரித்து எடுத்தல் அவசியமாகும். மண்புழு உரத்தை சல்லடையில் இட்டு சலிக்கும் பொழுது, நன்றாக மக்கிய உரம் மற்றும், மக்காத கழிவுகளை தனித்தனியாக பிரித்து எடுக்கப்படும். மக்காத கழிவுகளை மறுபடியும் மண்புழு படுக்கையில் இடவும்.

படி – 5

சேகரித்த மண்புழு உரத்தை அதிக வெயில்படாத காற்றோட்டம் உள்ள இடத்தில் சேமித்து வைக்கவும். இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டுள்ள மண்புழு உரத்தில் நன்மை தரும் நுண்ணுயிர்கள் அதிக அளவில் வளரும்.

மண்புழு உர உற்பத்தி

உகந்த மண்புழு

மண்புழு உரம் உற்பத்திக்காக நிலப்பரப்பின் மேல் வாழக்கூடிய மண்புழுரகம் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. மண்ணின் ஆழத்தில் வாழக்கூடிய மண்புழுவானது, மண்புழு உரத்தின் உற்பத்திக்கு உகந்ததல்ல.

ஆப்ரிகன் மண்புழு (யூடிரிலஸ் யுஜினியே), சிவப்பு புழு (எய்சினியா ஃபோய்டிடா), மக்கும் புழு (பெரியானிக்ஸ் எக்ஸ்கவேடஸ்) இவை அனைத்தும் மண்புழு உரத்தின் உற்பத்திக்கான சிறந்த மண்புழுக்களாகும்.

மூன்று மண்புழுக்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து மண்புழு உரத்தை உற்பத்தி செய்ய முடியும். மற்ற இரண்டை காட்டிலும் ஆப்ரிக்கன் (யூடிரிலஸ் யுஜினியே) புழுவானது மிகவும் சிறந்தது.

ஏனெனில் குறைந்த கால இடைவெளியில் அதிகளவு மண்புழு உரம் மற்றும் புழுக்களையும் உற்பத்தி செய்கிறது.

மண்புழு உர உற்பத்திக்கான இடம்

மண்புழு உரம் உற்பத்தி செய்ய நிழலுடன், அதிகளவு ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பகுதியாக இருத்தல் வேண்டும். உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப்பண்ணை மற்றும் கட்டிடங்களை உபயோகப்படுத்த முடியும்.

திறந்த வெளியில் உற்பத்தி செய்வதாக இருந்தால், நிழலான இடத்தை தேர்ந்தெடுக்கவும். வெயில் மற்றும் மழையிலிருந்துபாதுகாப்பதற்கு, தென்னைக் கீற்று கூரையை பயன்படுத்தலாம்.

மண்புழு உர உற்பத்திக்கான குப்பை குவியலை உபயோகமில்லாத ஈரமான சாக்குப்பை கொண்டு மூட வேண்டும்.

மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்புகள்

ஒரு சிமென்ட் தொட்டி கட்டுவதற்கு அதன் உயரம் 2 அடி மற்றும் அகலம் 3 அடி ஆக இருக்கவேண்டும். அந்த அறையின் அளவை பொருத்து நீளமானது எந்த அளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.

அடிப்பகுதியான தொட்டியானது சாய்வான வடிவம் போன்று கட்டப்பட வேண்டும். அதிகளவு தண்ணீரை வடிகட்டுவதற்காக மண்புழு உரத்தின் அமைப்பிலிருந்து ஒரு சிறிய சேமிப்பு குழி அவசியம்.

ஹாலோ ப்ளாக்ஸ், செங்கல் இவற்றை பயன்படுத்தியும் மேலோ சொன்ன முறையில் கட்டமைப்புகளை உருவாக்கலாம். இந்த முறையில் சரியான அளவில் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். இதனால் தேவையற்ற நீர் வெளியேறாது.

மண்புழு உர உற்பத்திக்கான படுக்கை

நெல், உமி அல்லது தென்னை நார்கழிவு அல்லது கரும்புத் தோகைகளை மண்புழு உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பாகத்தில் 3 செ.மீ உயரத்திற்கு பரப்பவேண்டும். ஆற்று மணலை இந்த படுக்கையின் மேல் 3 செ.மீ உயரத்திற்கு தூவ வேண்டும். பிறகு 3 செ.மீ. உயரத்திற்கு தோட்டக்கால் மண் பரப்ப வேண்டும். இதற்கு மேல் தண்ணீரைத் தெளிக்க வேண்டும்.

கழிவுகளை படுக்கையில் போடும்முறை

பாதி மக்கிய கழிவுகளை 30 சதவீதம் கால்நடை கழிவுடன் (எடை அல்லது கன அளவின் அடிப்படையில்) கலக்க வேண்டும். இக்கலவையை மண்புழு உர கட்டமைப்பின் விளிம்பு வரை நிரப்ப வேண்டும்.

ஈரப்பதம் 60 சதம் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மண்புழுவை சமமாக பரப்ப வேண்டும். ஒரு மீட்டர் நீளம்X1மீட்டர் அகலம்X.5 மீட்டர் உயரத்திற்கு இரண்டு கிலோ மண்புழு (2000 மண்புழு) தேவைப்படுகிறது.

மண்புழுவினை, கழிவுகளுக்குள்ளே விட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதனை மேலே பரப்பினால் போதுமானது.

தண்ணீர் தெளிக்கும் முறை

தினமும் தண்ணீர் தெளித்தல் அவசியமானது, 60 சதவீதம் ஈரப்பதம இருக்க வேண்டும். தேவையான போது தண்ணீரினைத் தெளிக்க வேண்டும். ஊற்றக் கூடாது. அறுவடைக்கு முன்னதாக தண்ணீர் தெளிப்பதனை நிறுத்தி விடவேண்டும்.

மண்புழு உரத்தினை ஊட்டமேற்றுதல்

அசிட்டோபேக்டர், அஸோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா,சூடோமோனாஸ், போன்ற உயிர் உரங்கள் மூலம் மண்புழு உரத்தினை ஊட்டமேற்றலாம். ஊட்டமேற்றுதல் மூலம் பயிர்ச்சத்துக்கள் மற்றும் உயிர் சத்துக்கள் அதிகரிக்கின்றன.

மேலும் நன்மை தரும் உயிரினங்கள், ஊட்டமேற்றிய மண்புழு உரத்தில் அதிகரிக்கின்றன. ஒரு டன் கழிவிற்கு ஒரு கிலோ அசோபாஸ் (அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ – பேக்டீரியா) என்ற அளவில் இருபது நாட்களுக்கு பின் மண்புழு படுக்கையில் சேர்க்கலாம்.

மண்புழு உர அறுவடை செய்முறை

தொட்டி முறையில், மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழு கழிவினை மட்டும் அறுவடை செய்ய வேண்டும். இந்த அறுவடை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். கையால் மண் புழு கழிவினை சேகரித்து நிழலில் குவித்து வைக்க வேண்டும்.

இந்த அறுவடையினை மண்புழு தெரியும் இடம் வரை செய்யவேண்டும். இந்த அறுவடையினை தகுந்த இடைவெளியில் செய்வதன் மூலம் நல்ல தரமான மண்புழு உரத்தினை பெறமுடியும்.

 

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!