உங்கள் கால்நடைகளை பாம்பு கடித்தால் செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்…

 |  First Published Jan 27, 2017, 12:37 PM IST



கால்நடைகளை பாம்பு கடித்தால் செய்யக் கூடியது மற்றும் செய்யக்கூடாதவை பற்றி அறிந்து கொள்ள இதை வாசியுங்கள்….

பசுக்கள், எருதுகள் உள்பட கால்நடைகளை பாம்பு கடிப்பது இயல்பாக நடப்பதே. மாடுகளை மேய்ச்சலின் போதுதான் அதிகளவில் பாம்பு கடிக்க வாய்ப்புள்ளது.

Tap to resize

Latest Videos

மாடுகளின் முகம், தலை, தாடை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பாம்ப கடிக்க வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு கடித்தால் விஷத்தின் தீவிரம் அதிகமாக ஏற்பட்டு மாடுகள் இறக்க வாய்ப்புள்ளது.

குதிரை மற்றும் மாடுகளின் உடல் பருமன் பெரிதாக இருப்பதால் உடனடியாக இறப்பு ஏற்படுவதில்லை என்றாலும் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்.

நாய் மற்றும் பூனைகள் பெரும்பாலும் பாம்புடன் சண்டையிடும்போது ஒரு முறைக்கும் மேல் பாம்பு கடிக்க வாய்ப்புள்ளது. அவற்றின் உடல் பருமன் குறைவாக இருப்தால் விஷம் உடனடியாக உடலின் பல பாகங்களுக்கும் பரவி உடனடியாக இறப்பை ஏற்படுத்தும்.

பன்றிகளின் தோலுக்கு அடியில் மிக கெட்டியான கொழுப்பு அடுக்கு இருப்பதால் பாம்புக் கடியால் அவை பாதிக்கப்படுவதில்லை.

செம்மறி ஆடுகளில் உரோமம் மிகப் பெரியத் தடுப்பாக இருந்தாலும், மடியில் ஏற்படும் பாம்புக்கடி தீவிர பாதிப்பை உண்டாக்குகிறது.

பாம்பின் வகைகள்…

உலகில் 3000 வகையான பாம்புகள் காணப்படுகின்றன. அவற்றில் 375 வகையான பாம்புகள் மட்டுமே விஷத் தன்மை கொண்டது.

நாக பாம்பு, நல்ல பாம்பு, கட்டு விரியன், சுருட்டை, பச்சைப் பாம்பு (விரியன்) மற்றும் கண்ணாடி விரியன் போன்றவை விஷத் தன்மையுள்ளவை.

சாரைப் பாம்பு, மண்ணுளிப்பாம்பு, பச்சைப் பாம்பு, தண்ணீர் பாம்பு மற்றும் மலைப்பாம்பு போன்றவை விஷமற்ற பாம்புகளாகும்.

விஷமுள்ள பாம்புகள் மற்றும் விஷமற்ற பாம்புகள் இடையே உருவத்தில் சிற்சில மாறுதல்களோடு காணப்படுகின்றன. விஷமுள்ள பாம்புகளின் மேல் தாடையில் இரு நீண்ட கூரான விஷப்பற்களும், அதன் தலை முக்கோண வடிவிலும், கண் பார்வை செங்குத்தாக அல்லது நீள் வட்டமாகவும், கண்ணுக்கும் மூக்குத் துவாரத்துக்கும் இடையே முகக் குழியுடனும், வாலின் அடியில் செதில்கள் பிளவு பட்டும் காணப்படும்.

விஷமற்ற பாம்புகளின் தலை வட்ட வடிவிலும், விஷப்பற்கள் இன்றியும், கண்பார்வை வட்டமாகவும், முகக்குழி இல்லாமலும், வால் பகுதியில் செதில் பிளவுபடாமலும் காணப்படும்.

பாம்பு கடித்தால் செய்ய வேண்டியவை…

பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை ஆராய்ந்து அது விஷமுள்ள பாம்புக் கடியா அல்லது விஷமற்ற பாம்புக் கடியா எனத் தெளிவுபடுத்திக் கொண்டு உடனடியாக சிகிச்சைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

பாம்பை அடித்து விட்டால் அதையும் எடுத்துச் செல்ல வேண்டும். பாம்பை அடிக்கும்போது அதன் தலையை சிதைக்காமல் இருப்பது அடையாளம் காண உதவும்.

கடிபட்ட பிராணிகளை அமைதிப்படுத்த வேண்டும். கடிபட்ட இடம் பிராணிகளின் இதயத்துக்கு கீழ்ப்புறமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிராணிகளை ஓடவோ அல்லது நடக்கவோ செய்வதால் விஷம் விரைவாக உடலின் பல பாகங்களுக்கும் பரவி வீரியமிக்கதாக செயல்பட்டு உயிரிழக்க நேரிடும்.

கடிபட்ட இடத்திற்கு மேலே கயிறு கொண்டு கட்டலாம். ஆனால், அது ரத்த ஓட்டத்தை முழுவதுமாக நிறுத்திவிடக் கூடாது. 20 நிமிடங்களுக்கு ஒரு நிமிடம் கட்டை அவிழ்த்து மீண்டும் கட்ட வேண்டும்.

பாம்பு கடித்தால் செய்யக் கூடாதவை.

கடிபட்ட இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கக் கூடாது,

கடிபட்ட இடத்தைக் கிழிக்கக் கூடாது,

விஷத்தை வாய் வைத்து உறிஞ்சக் கூடாது,

கடிபட்ட இடத்திற்கு மேல் கயிற்றை இறுக்கமாக கட்டக் கூடாது,

மூலிகைகள் அல்லது மற்ற சுத்தமறற பொருட்கள் மற்றும் சுண்ணாம்பை பூசக்கூடாது,

தீக்குச்சி மருந்தை வைத்து தீ மூட்டக் கூடாது,

அடித்த பாம்பை அஜாக்கிர தையாக கையாளக் கூடாது.

விஷமுறிவு மருந்து…

பாம்புக் கடிக்கு பாம்பின் விஷத்திலிருந்தே விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. விஷமுறிவு மருந்து தனிப்பட்ட விஷமுறிவு மருந்தாகவும், பொதுவாகக் காணப்படும் விஷப் பாம்புகளின் ஒட்டு மொத்த விஷமுறிவு மருந்தாகவும் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

மருந்துக் கடைகளிலுள்ள பொதுவான விஷமுறிவு மருந்தில் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் போன்ற பாம்புகளுக்கு ஒருங்கே சேர்ந்த விஷ முறிவு மருந்து குப்பிகளில் கிடைக்கிறது.

கால்நடை மருத்துவரின் கண்காணிப்பில் எதிர் உயிரி மருந்து, ரணஜன்னி தடுப்பு மருந்து, தேவைப்பட்டால் ரத்த மாற்று சிகிச்சை போன்றவை அளிக்கலாம்.

மற்ற விஷக் கடிகளில் வலியும் வீக்கமும் காணப்படும். அவற்றிற்கு வலி நிவாரண மருந்துகளும், ஹிஸ்டமின் எதிர்ப்பு மருந்துகளும் வழங்க வேண்டும்.

click me!