’பருவத்தே பயிர் செய்’ என்பது மூத்தோர் வாக்கு. பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கும், பாரம்பரியத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
எந்தெந்த பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அதை மட்டுமே பயிரிட்டார்கள்.
பசுமைப் புரட்சிக்குப் பிறகு, பட்டம் மறந்து, பாரம்பரியம் மறந்து, ரசாயனங்களைக் கொட்டியதால் மண் மலட்டுத் தன்மைக்கு ஆளாகிக் கிடக்கிறது.
ரசாயன உரத்தில் விளையும் பயிர்களில் நோய்த் தாக்குதல் அதிகமாகி பெருத்த நஷ்டத்தைச் சந்திக்கிறார்கள் விவசாயிகள். அதேநேரம் இயற்கை வழி விவசாயம் செய்பவர்கள் செலவைக் குறைத்து வரவை அதிகமாக்கி நஷ்டத்தைத் தவிர்த்து வருகிறார்கள்.
கிழக்குக் கடற்கரை சாலையுடன் மதுராந்தகத்தை இணைக்கும் கடலூர் (கிராமம்) மெயின் ரோட்டில் இருக்கிறது மேலகாண்டை கிராமம். இரண்டு பக்கமும் மரங்கள், எங்கு பார்த்தாலும் பசுமையான விவசாய நிலங்கள் சூழ்ந்த ஆழமான கிராமம்.
ரசாயனத்துல செலவு அதிகம்….. இயற்கையில நிறைவான லாபம்!
எழுபது சென்ட் நிலத்தில் கிச்சிலி சம்பா நெல்லை இயற்கை முறையில் சாகுபடி செய்தால் லாபம் அள்ளும்.
கிச்சிலி சம்பா ரக நெல்லின் வயது 135 முதல் 150 நாட்கள். மழை பெய்து தொடர்ந்து 15 நாட்கள் தண்ணீரில் மூழ்கினாலும் நெல் சாயாது, மகசூல் குறையாது. அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது.
70 சென்ட் நிலத்துக்கு ஒன்றரை கிலோ கிச்சிலி சம்பா நெல்லை, 7 சென்ட் பரப்பில் நாற்று விடவேண்டும். அப்போதே இரண்டு டன் மாட்டு எருவைத் தூவ வேண்டும். பிறகு, இரண்டு உழவு ஓட்ட வேண்டும்.
உழவு ஓட்டி மூன்று நாள் கழித்து எருக்கஞ்செடி, ஆவாரை இலை போன்ற இலைகளை உழுத வயலிலிட்டு, ‘குலைமிதக்க’ வேண்டும். அதனுடன் அசோஸ்பைரில்லம் தூவினால், மண் வளமாகி மகசூல் அதிகமாகும்.
நாற்றுகள் வளர்ந்தவுடன் தனியாகப் பிரித்து ஒற்றை நாற்று முறையில் 30 சென்டிமீட்டர் இடைவெளி கொடுத்து நடவு செய்ய வேண்டும். சரியாக 15 -ம் நாள் 500 மில்லி ஜீவாமிர்தத்தை, 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
20 -ம் நாள் களை எடுக்க வேண்டும். களை எடுத்த 5 நாட்களுக்கு பிறகு, 500 மில்லி பஞ்சகவ்யாவை , 20 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும். இத்துடன் மாட்டுச் சிறுநீரில் பனம் பழத்தைக் கரைத்துவிட்டும் கலந்து தெளிக்கலாம். இது பயிரின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
40 -ம் நாள் களையிருந்தால், மீண்டும் களை எடுக்கலாம். கைக்களை எடுக்கும் முறையே சிறந்தது. களையெடுத்த பின்பு ஐந்து கிலோ வேப்பம்பிண்ணாக்கு, 20 கிலோ கடலைப்பிண்ணாக்கு இரண்டையும் கலந்து பயிருக்கு அடியுரமாக வாய்க்கால் நீருடன் கலந்து கொடுக்கவேண்டும். இதனால், பயிரின் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகமாகும்.
55 -ம் நாள் 300 மில்லி வேப்பெண்ணெயை, 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்துவிட வேண்டும். இதனால் தண்டுத் துளைப்பான் பூச்சித் தாக்குதல் இருக்காது. கதிர் வருவதற்கு முன்னாலும், கதிர்வந்த பின்னாலும் பஞ்சகவ்யா ஒரு லிட்டர், புளித்த தயிர்க் கரைசல் இரண்டு லிட்டர் இவ்விரண்டையும் தனித்தனியாகத் தெளிக்க வேண்டும். இதனால் கதிர்நாவாய்ப்பூச்சி தாக்குதல் வராது. 135 முதல் 150 -ம் நாட்களுக்குள் பயிர் அறுவடைக்கு வந்துவிடும்.
ஆடிப்பட்டத்துக்கு நிலத்தை எப்படி தயார் செய்வது?
70 சென்ட் நிலத்தில் அறுவடை முடித்த பின்னர் மாட்டு எருவைத் தூவி, தாளுடன் சேர்த்து உழவு செய்யவேண்டும். மூன்று நாட்கள் கழித்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் பாய்ச்சும்போது எருவானது நிலத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேரும். இதனால் மண்ணின் வளம் பெருகும்.
தொடர்ந்து 10 நாட்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் நின்ற நிலத்தில் மேலும் மாட்டு எருவைத் தூவி விட வேண்டும். இதனால், மண்ணில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். பிறகு, இலைதழைகளைப் போட்டு மிதக்க வேண்டும். இரண்டு முறை உழவு ஓட்டினால், நல்ல மகசூல் கிடைக்கக் கூடிய நிலமாக மாறும்.
கைகளால் பிரித்தால் கலக்கல் மகசூல்!
தாமோதரனின் தந்தை பன்னீர், நெல் விதைகளை கதிரிலிருந்து கைகளால் பிரித்துக் கொண்டிருக்க, “ஏன் கையால் பிரித்து எடுக்குறீர்கள்?” என்று அவரிடம் நாம் கேட்டபோது, அவர் சொன்ன தகவல் ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. “கதிரை அடிச்சி தூத்தி எடுக்கிற நெல்லை விதைக்காக நாங்க பயன்படுத்துறது கிடையாது.
கதிரிலிருந்து நேரடியாகவே பிரிச்சு எடுக்கறதுதான் எங்க வழக்கம். இப்படி பிரிச்சு எடுக்கிற நெல்லை விதைக்கிறது மூலமா நல்ல மகசூல் கிடைக்கும்.