மண்ணை வளமாக்க தக்கைப்பூண்டு..!
மண்வளம் குறைந்த நிலத்திலும் பாரம்பர்ய ரக நெல் வகைகள் வளரும் தன்மை கொண்டவை. வெள்ளைப் பொன்னிக்கு ஆடிப் பட்டமும், மாசிப் பட்டமும் ஏற்றவை. இதன் வயது 135 முதல் 150 நாட்கள்.
undefined
தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சால் உழவு ஓட்டி மூன்று நாட்கள் காயவிட்டு.. 15 கிலோ தக்கைப்பூண்டு விதையை விதைத்து, ஒரு சால் உழவு ஓட்டி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
தொடர்ந்து பாசனம் செய்தால், 45-ம் நாளுக்கு மேல் பூவெடுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் செடியோடு அப்படியே மடக்கி உழவு செய்ய வேண்டும். இது தேவையான தழைச்சத்தைக் கொடுத்து மண்ணை வளப்படுத்தும்.
விதைநேர்த்திக்கு பீஜாமிர்தம் !
ஒரு ஏக்கர் நடவுக்கு 4 சென்ட் பரப்பில் நாற்றங்கால் தேவை. 30 கிலோ விதைநெல்லை ஒரு பாத்திரத்தில் போட்டு 20 லிட்டர் பீஜாமிர்தத்தை ஊற்றி, நெல்மணிகள் மூழ்கும்படி வைக்க வேண்டும்.
24 மணி நேரம் இப்படி வைத்த பிறகு, நெல்லை ஒரு சணல் சாக்கினுள் கொட்டி, ஓர் இரவு முழுவதும் இருட்டில் வைத்தால், விதைகள் முளைவிடும். பிறகு விதைகளை சணல் சாக்கின் மீது கொட்டி பரப்பி அரை மணி நேரம் உலரவிட்டு நாற்றங்காலில் விதைக்க வேண்டும்.
விதைத்த 5 மற்றும் 12-ம் நாட்களில் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசனத் தண்ணீருடன் கலந்துவிட வேண்டும். 25-ம் நாளுக்கு மேல் நாற்றுப் பறித்து நடவுசெய்யலாம்.
ஊட்டத்துக்கு ஜீவாமிர்தம் !
வயலில் நாற்று நடவுக்கு முன் தினம் ஒரு சால் உழவு செய்து வைக்க வேண்டும். நாற்று நடவு செய்த அன்றே பாசனத் தண்ணீருடன் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்துவிட வேண்டும். தொடர்ந்து நிலத்தின் தேவையைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சவேண்டும்.
நடவு செய்த 15, 30, 45, 60, 75, 90 மற்றும் 115-ம் நாட்களில் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை பாசனத்தண்ணீரில் கலந்துவிடவேண்டும்.
20-ம் நாளில் களை எடுக்க வேண்டும்.
70-ம் நாளுக்கு மேல், 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வேப்பிலை கஷாயம் என்ற கணக்கில் கலந்து, கைத் தெளிப்பானால் தெளிக்க வேண்டும். இது பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.
80-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும்.
85-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் மோர்க்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும்.
95-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்கவேண்டும்.
130 நாளுக்கு மேல் கதிர் முற்றத் தொடங்கும். பிறகு நிலத்தை காயவிட்டு அறுவடை செய்யலாம்.
உர தயாரிப்பு முறைகள் !
வேப்பிலை கஷாயம் !
ஒரு பாத்திரத்தில் வேப்பிலை 5 கிலோ, நாட்டுப் பசுமாட்டுச் சாணம் 2 கிலோ, நாட்டு பசு மாட்டுச் சிறுநீர் 5 லிட்டர், 20 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றை ஊற்ற வேண்டும்.
இக்கரைசலை காலையிலும் மாலையிலும் நன்கு கலக்கி வந்தால், இரண்டு நாட்களில் வேப்பிலை கஷாயம் தயார்.