நம் நாட்டின் இயற்கை வளம் தொடர்ச்சியாக குறைய தொடங்கியுள்ளது. அதற்க்கு சான்றாக நம் விவசாய்கள் இருக்கின்றனர். ஏனென்றால் இரசாயன பூச்சி கொல்லிகளின் விலையேற்றமும், உரகங்களின் பற்றாக்குறையும் உள்ள இச்சூழலில் அதிக மகசூல் பெறுவது, விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. குறைந்த செலவில் மகசூல் தரும் எந்தவொரு மாற்று திட்டத்தையும் ஏற்ற விவசாயிகள் தயாராக உள்ளனர்.
நமது நாட்டின் பல்வேறு பகுதியில் இயற்கை செய்முறை திட்டம் சரியாக விவசாய்களுக்கு பயனளித்து வருகிறது. விவசாய்களும் இத்திட்டத்திற்கு மாறி வருகின்றனர். இயற்கை செய்முறை திட்டம் ஒன்றை இங்கு பாப்போம்.
ஆடுகளிடமிருந்து தயாரிக்கப்படும் உரம்:
உலகில் பல்வேறு கிராமங்களில் ஆடுகளை காணலாம். ஆடுகளின் சாணம், சிறுநீர் பால் ஆகியவை மிகவும் பயனுள்ளதாகும். இந்த உரமானது ஆடுகளின் கழிவுகள், பால் போன்ற வற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த உரமானது செடி வளர்ச்சியை தூண்டுவதுடன், இலைகள் மற்றும் பழப் பிஞ்சுகள் உதிர்வதை தடுத்து, அதிக எடையுள்ள, சுவையான பொருட்களை தரும்.
உரம் செய்யும் முறை மற்றும் உபயோகிக்கும் முறை:
ஐந்து கிலோ ஆட்டு புளுக்கை, மூன்று லிட்டர் ஆட்டுச் சிறுநீர், 1.5 கிலோ கிராம் சோயா அல்லது நிலக்கடலை புண்ணாக்கு அல்லது அரைத்த உளுந்து அல்லது பாசிப்பயிர், ஆகியவற்றை ஒர் இரவு தண்ணீரில் ஊரவிடவேண்டும்.பின்னர் சுமார் இரண்டு லிட்டர் ஆட்டின் பால், தயிர், இளநீர், கள், கரும்புச்சாறு மற்றும் ஒரு டசன் பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை சேர்க்கவும்.கள்ளுக்கு பதிலாக 50 கிராம் ஈஸ்ட்டை 2 லிட்டர் சுடு தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம். அதே போல், கரும்புச்சாறுக்கு பதிலாக, 1 கிலோ வெல்லத்தை 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயன்படுத்தலாம்.மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கூட்டுப் பொருட்களையும் ஒரு பிளாஸ்டிக் உருளையில் வைத்து நன்கு கலக்கவும். அதை பதினான்கு நாட்கள் இரண்டு வாரம் நிழலில் வைத்து, பின் அக்கலவையை உபயோகிக்கலாம்.
ஒரு நாளுக்கு இரண்டு முறை, வலது பக்கமாக 50 முறையும், இடது பக்கமாக 50 முறையும் கிளர வேண்டும். பின் அந்த பிளாஸ்டிக் உருளையை பூச்சிகளோ, புளுக்களே முட்டை இடாதவாறு நல்ல பருத்தித் துணியைக் கொண்டு மூடிவிடவேண்டும். இந்த கரைசலை மேற்கண்டவாறு நன்கு கலந்து, முறைபடி பாதுகாத்து வைத்தால் ஆறு மாதங்கள் வரை வைத்து உபயோகிக்கலாம்.மேலும், இந்த கரைசல் சற்று அதிகமான அடர்த்தியில் காணப்பட்டால், இளநீர் அல்லது தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளலாம்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு, சுமார் இரண்டு லிட்டர் ஆட்டோட்டத்தை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து பயிர்களுக்கு தெளிக்கவும். இக்கரைசலை தெளிக்க பயன்படுத்தும் முன், வடிகட்டி விட்டு பின் பயன்படுத்தலாம், இது தெளிப்பானின் ஒட்டைகளில் தடை இல்லாமல் தெளிக்க உதவும். மேலும், நல்ல விளைவு கிடைக்க, பூ பூக்கும் நேரத்திற்கும் காய் பிடிக்கும் நேரத்திற்கும் முன்னதாக பயன்படுத்தவும்.