வெள்ளரி:
சாதாரண நீரைவிட 95 சதவீத சத்து மிகுந்த நீர்ச்சத்தை கொண்டிருப்பதால் உடல் வெப்பநிலையையும், நீர்ச்சத்தையும் சீராகப் பராமரித்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.
இதிலுள்ள வைட்டமின்களும், மாங்கனீஸ், பொட்டாசியம், சிலிக்கான் ஆகிய தாதுக்கள் தோலுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன.
இதில் உள்ள லேரிசிரிசினால், பினோரெசினால், சீகோஐசோசிரிசினால் என்ற 3 லிக்னன்கள் பலவகையான புற்றுநோய்கள் வரும் வாய்ப்பைத் தடுக்கின்றன.
வெள்ளரிச் சாற்றில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியவை ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.
இவ்வளவு மருத்துவ குணமிக்க வெள்ளரி சாகுபடி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்:
ரகங்கள்:
கோ 1, ஜாப்பனிஸ் லாங் கிரீன், ஸ்டெரெய்ட் எய்ட், பாயிண்ட் செட்டி.
மண் மற்றும் பருவநிலை:
வடிகால் வசதியுள்ள, அங்ககச் சத்து நிறைந்த மணல்சாரி வண்டல் மண் ஏற்றது.
ஏற்ற பருவம்:
ஜூன் மாதமும், ஜனவரி முதல் ஏப்ரல் முடிய நான்கு மாதங்களும் விதைப்பதற்கு மிகவும் ஏற்ற காலம்.
விதைப்பு:
நிலத்தை நான்கு முறை நன்கு உழ வேண்டும். 5 அடி இடைவெளியில் நீளமான கால்வாய்கள் அமைக்க வேண்டும். ஏக்கருக்கு ஒரு கிலோ விதை தேவைப்படும்.
விதை நேர்த்தி:
ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் உயிர்ப் பூசணக் கொல்லிகளையோ அல்லது 2 கிராம் கார்பண்டசிம் என்ற ரசாயன பூசணக் கொல்லியையோ கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நீர்ப்பாய்ச்சல்:
கால்வாயின் பக்கவாட்டில் 2 அடி இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். விதைகளை ஊன்றுமுன் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். பின் வாரத்துக்கு ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
உரமிடுதல்:
ஏக்கருக்கு 16 மெட்ரிக் டன் தொழு உரத்தை அடியுரமாக இடவேண்டும். பின்னர் விதைத்த 30-ஆம் நாள் ஏக்கருக்கு 14 கிலோ தழைச்சத்து தரவல்ல 30 கிலோ யூரியாவை மேலுரமாக இடவேண்டும்.
பின்செய் நேர்த்தி:
இரண்டு அல்லது மூன்று முறை களைக்கொத்து கொண்டு களையெடுக்க வேண்டும்.
இந்த முறைகளை பின்பற்றி, வெள்ளாரி சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெற்று நல்ல லாபம் பெறலாம்.