கிராமங்களில் உள்ள கண்மாய்கள், குளங்களில் மீன்குஞ்சுகளை இருப்பு செய்து வளர்ப்பதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். இதற்கு “நன்னீர் மீன் வளர்ப்பு” என்று பெயர்.
தற்போது கடல் மீன்களின் விலை அதிகமாக இருப்பது, வரத்து குறைவு போன்ற காரணங்களால் நாட்டு மீன்களுக்கான தேவைப்பாடு இருந்து வருகிறது.
undefined
இந்த நிலையில் நன்னீரில் மீன்வளர்ப்பு தொடர்ந்து லாபம் தரும் தொழிலாக உருவெடுக்க வாய்ப்பிருக்கிறது. மீன் வளர்ப்பு குளத்தின் மண், நீரின் உற்பத்தி திறன், மீன்வளர்ப்போரின் அனுபவம், ஆர்வம், கையாளப்படும் தொழில்நுட்பத்தின் வகை மற்றும் மூலதனத்திற்கேற்ப எக்டரில் ஆண்டுக்கு 10 முதல் 12 டன் மீன் உற்பத்தி காணலாம்.
மீன் வளர்ப்புக்கு ஏற்ற நீர் நிலைகள்
நன்னீர் மீன் வளர்ப்பை தொடங்க நினைத்தால், தேர்வு செய்யும் நீர்நிலையானது குறைந்தது 6 மாதங்களுக்கு வற்றாத நீர் பரப்பை கொண்டிருக்க வேண்டும்.
குளத்தில் குறைந்த பட்சம் 5 அடி முதல் 6 அடி ஆழத்திற்கு நீர் இருக்க வேண்டும்.
நீரின் கார, அமிலத்தன்மை 7.5 முதல் 8.5 அளவில இருத்தல் வேண்டும்.
மீன்வளர்ப்பு நீர் பரப்பு குறைந்தது அரை ஏக்கர் அளவிற்கு இருக்க வேண்டும்.
குளத்தில் நீர் கசிவு, அதிகமான துர்நாற்றம் மற்றும் கலங்கிய நிலை இருத்தல் கூடாது.
மேலாண்மை நடவடிக்கைகள்
1. குளங்களை தயார் செய்தல்
செடி, கொடிகளையும், புல், பூண்டுகளையும் வேருடன் அகற்ற வேண்டும். கரை, நீர்வரத்து மற்றும் வடிகாலை சீரமைக்க வேண்டும்.
மண்ணின் கார,அமில நிலைக்கேற்ப சுண்ணாம்பு இட வேண்டும். கார,அமில நிலை 7.5- 8.5 அளவில் இருக்குமாயின் எக்டரில் 250 கிலோ சுண்ணாம்பு இடவேண்டும். அமிலத்தன்மை கூடுதல் நிலையில் சுண்ணாம்பின் தேவையும், அதற்கேற்ப கூடும்.
குளத்தில் அங்ககப் பொருள்களை விரைவில் மக்கச் செய்து ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன் கிருமிநாசினியாகவும் சுண்ணாம்பு செயல்படுகிறது.
2. உரமிடல்
மீன்களுக்கு தேவையான இயற்கை உணவுகளான தாவர, விலங்கியல் நுண்ணுயிர்களை நிலைநிறுத்தச் செய்ய உரமிடல் வேண்டும். ஒரு எக்டருக்கு ஒரு வளர்ப்புக்காலத்தில், மாட்டுச்சாணம் 10 முதல் 12 டன் அல்லது, கோழிச்சாணம் 5 முதல் 6 டன் பன்றிச்சாணம் 2.5 முதல் 3 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 250 கிலோ இட வேண்டும்.
மொத்தத் தேவையில் 5 ல் 1 பங்கை மீன்குஞ்சுகள் இருப்பு செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அடியுரமாக இட வேண்டும். எஞ்சிய உரத்தை சமமாய் பிரித்துக் கொண்டு மாதமாதம் இட்டு வரவேண்டும்.
இயற்கை உரத்தையும், செயற்கையும் உரத்தையும் மாற்றி மாற்றி 15 நாட்கள் இடைவெளியில் விட்டு வருவது நல்லது.
மீன்குஞ்சு இருப்பு செய்தல்
குறுகிய காலத்தில் எடையுடன் வளரக்கூடிய, பொதுமக்களால் விரும்பி உண்ணக்கூடிய கட்லா,ரோகு,மிர்கால்,சாதாக்கெண்டை, வெள்ளிக் கெண்டை, புல்கெண்டை ஆகிய மீன்கள் தான் கூட்டின மீன்வளர்ப்புக்கு ஏற்றது.
குளம், கண்மாய்களில் உள்ள நீர்த்தாவரங்களை மட்டுமே உணவாக கொள்ளக்கூடிய புல்கெண்டைகளை குளம்,கண்மாய்களில் இருப்பு செய்வதன் மூலம் நீர்த்தாவரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதுடன், புல் கெண்டையில் மட்டுமின்ற மற்ற மீன்களின் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணலாம்.
அனைத்து இனங்களிலும் சேர்த்து மொத்தமாக குளங்களில் எக்டருக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மீன்குஞ்சுகள் வரையிலும் நீர்ப்பாசன கண்மாய்களில் மொத்த நீர்ப்பரப்பில் சரிபாதியை மீன்வளர்ப்பு நீர்ப்பரப்பாக கணக்கிட்டு எக்டருக்கு ஆயிரம் மீன்குஞ்சுகளும் இருப்பு செய்ய வேண்டும்.
இருப்பு செய்யப்படும் மீன்குஞ்சுகள் 5 சென்டிமீட்டருக்கு மேல் இருப்பது அவசியம். குளத்தின் உற்பத்தி திறனுக்கேற்ப இருப்பு செய்யப்படும் மீன்குஞ்சுகளின் இனத்தின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்து கொள்ளவும் வேண்டும்.
மேலுணவு இடல்
வளர்ப்பிலுள்ள மீன்களின் வளர்ச்சியை மேம்படுத்தி உற்பத்தியில் உயர்வு காண கூடுதலாக உணவிடுதல் அவசியம். கடலைப்புண்ணாக்கும், தவிடும் சரிசமமாக கலக்கப்பட்டு வளர்ப்பிலுள்ள மீன்களின் எடையில் 3 சதவீதம் அளவில் அன்றாடம் கூடுதல் உணவாக இட்டு வருவதன் மூலம் உற்பத்தியில் உயர்வு காணலாம்.
மாதத்திற்கு ஒரு முறை குளத்தில் வலையிட்டு மீன்களை பிடித்து பார்த்து வளர்ச்சி அறிந்து அதற்கேற்ப உணவுத்தேவையை நிர்ணயம் செய்து கொள்ளல் வேண்டும்.
மீன் உற்பத்தி
கிராமப்புறங்களில் உள்ள குளங்களில் கூட்டின மீன்வளர்ப்பில் மிகத்தீவிர மீன்வளர்ப்பு நடவடிக்கைகளை கையாண்டு எக்டரில் ஆண்டுக்கு சராசரியாக 2 டன் வரையிலும் மீன் உற்பத்தி செய்து 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் லாபம் காணலாம்.
நீர் பாசன கண்மாய்களில் எக்டரில் சராசரியாக 500 கிலோ வரையிலும் உற்பத்தி செய்து 8 ஆயிரம் வரையிலும் லாபம் காணலாம்.
சொந்தமாக குளம் அமைத்து கூட்டின மீன்வளர்ப்பில் எக்டரில் சராசரியாக 70 ஆயிரம் வரையிலும் லாபம் காணலாம்.