இலைச் சுருட்டுப் புழு:
தாக்குதலின் அறிகுறிகள்
முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழு, உமிழ் நீர் கொண்டு உற்பத்தி பண்ணும் மெல்லிய பட்டு நூல் போன்ற இழைகளால் இலையை சுருட்டி, இலையின் நுனிப்பகுதியை அடிப்பகுதியுடன் மடக்கி இணைத்து, பின்னி அதற்குள் பாதுகாப்பாக இருந்து கொண்டு, பச்சையத்தை அரித்து உண்பதனால், பச்சையம் சுரண்டப்ட்ட பகுதிகள் வெண்மையாக மாறிவிடும்.
அதிக அளவு தாக்கப்பட்ட பயிரில் இலைப் பச்சையம் அதிக அளவில் அரிக்கப்பட்டு இலைகள் வெண்மையான திட்டுகளுடன் காணப்படுவதோடு, பயிர் வளர்ச்சி குன்றி, மணி பிடிப்பதும் பாதிக்கப்படுகிறது.
இந்தப் பூச்சி பயிரை எல்லா வளர்ச்சிப் பருவத்திலும் தாக்கக்கூடியது. பூக்கும் பருவத்தில் பூச்சி தாக்கி, கண்ணாடி இலை பாதிக்கப்பட்டால் மகசூல் அதிகம் குறைய ஏதுவாகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்
நடவு செய்வதற்கு முன்னர் இரண்டு மாட்டு வண்டி தொழுவுரத்தை வயலில் இடலாம்.
வயல் வெளிகளில் காணப்படும் சில புல் பூண்டுகள் இப்பூச்சிக்கு மாற்றுப் பயிராகக் காணப்படுவதால், புல் பூண்டுகளை அகற்றி, வயல்வெளிகளை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
தழைச்சத்தை தேவைக்கு அதிகமாகவோ, ஒரே தடவையாகவோ போடக் கூடாது. பூக்கும் பருவத்தில் அதிக அளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும்.
விளக்குப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
டிரைக்கோகிரம்மா இன முட்டை ஒட்டுண்ணிகள் இப்பூச்சியின் முட்டையை தாக்கி அழிக்கக்கூடியது.
எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களைப் பயிரிடலாம்.
வேப்ப இலை கொத்துகளை வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.
வேப்ப எண்ணெய் 300 மில்லி மண்ணெண்ணெய் 250 மில்லி மற்றும் காதி சோப் 50 கிராம் ஆகியவற்றை 160 லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து காலை வேளையில் இலைப் பிணைப்புகளில் நன்கு படும்படி தளிக்க வேண்டும்.
10 கிலோ வேப்ப இலையை விழுது போல் அரைத்து அதனை 1 லிட்டர் நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை 30 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். இரவு முழுவதும் ஆற வைத்து 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
இலந்தை மரக்கிளையால் பிணைக்கப்பட்ட இலைகளை உரசி, மறைந்திருக்கும் புழுக்களை முட்களால் குத்தி அழிக்கலாம். இது போல சீமைக்கருவேல கிளைகளையும் பயன்படுத்தலாம்.
சோற்றுக் கற்றழை சாறை தெளிக்கலாம்.
சாம்பல் தூவலாம்.