மண்ணின் ஹியுமிக் அமிலம், நுண்ணுயிரிகள், காற்றோட்டம் மற்றும் வடிகால் வசதி ஆகியவை சரியான அளவில் பேணப்படுவதோடு மண் வளம் கீழ்க்கண்ட முறைகளில் அதிகரிக்கப்பட வேண்டும்.
பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பையை பயிரிடுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு விதைத்து, அது பூக்கும் பருவத்தில் வயலினுள் மடித்து உழவு செய்யவேண்டும்
செஸ்பேனியா மற்றும் சணப்பையினை வாழைக்கன்று நட்ட பின் விதைத்துப் பின் 60 நாட்களில் அவற்றில் விதை வரும் முன்பு மடித்து உழுது விடவும்.
வாழை ஒன்றுக்கு ஜிப்சம் 2 கிலோ, அதோடு ஒரு வாழை மரத்துக்கு 15 கிலோ தொழு உரம் அல்லது ஒரு எக்டருக்கு 45 டன்கள் என்ற அளவில் இடுவதால் மண்ணின் அமில காரத்தன்மை சரியான அளவில் அமைந்து, நுண் மற்றும் பேரூட்டச் சத்துக்கள் பயிருக்குச் சரியான அளவில் கிடைக்கின்றன.
எக்டருக்கு 25 லிட்டர் பொட்டாசியம் ஹியுமேட் கன்று நட்ட 3 மற்றும் 5வது மாதங்களில் இடுவதால் அங்ககத் தன்மை அதிகரிக்கச் செய்யும்.
வாழைக்கன்று ஒன்றிற்கு 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு + தென்னை நார்க் கழிவு அல்லது கோழிக் குப்பை அல்லது நெல் உமிச் சாம்பல் 14 கிலோ என்றளவு இடுவதாலும் மண்ணில் அங்கக தன்மை அதிகரிப்பதோடு, நூற்புழுக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றது.
வேம் (VAM- வெஸிகுலார் அர்பஸ்குலார் மைக்கோரைசா) 20 கிராம் + பாஸ்போபாக்டீரியா 20 கிராம் + அஸோஸ்பைரில்லம் 50 கிராம் + டிரைக்கோடெர்மா ஹர்ஸியானம் 20 கிராம் கலந்த கலவையினை வாழை ஒவ்வொன்றுக்கும் இடுவதால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை வேர் மண்டலத்தில் அதிகரிக்கச் செய்யலாம்.