கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி
கடந்த சில ஆண்டுகளாக பயிர் வளர்ப்பு முறை வேதியியல் முறைக்கு மாறியுள்ளது. இத்தகைய வேதியியல் முறையில் அதிகப்படியான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகளின் பரிந்துரைக்கு அதிகமான பயன்பாட்டினால் மண்வளம் மற்றும் மகசூல் குறைதல், பூச்சிக் கொல்லி மருந்துக்கு எதிர்ப்பு தன்மை, நிலத்தடி நீர் மாசுபடுதல் மற்றும் சுற்றுப்புறசூழல் மாசுபடுதல் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.
இத்தகைய இரசாயன பொருட்கள் மூலம் மண்ணில் வாழும் பயன் தரக்கூடிய நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகின்றது. மேலும் இத்தகைய வேதிப்பொருட்களின் நச்சுதன்மை பயிர்களின் விதைகள் மற்றும் காய்கறிகள், பழங்கள் மூலம் சென்று மனிதனின் உடல் நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கு நோய்களையும் தோற்றுவிக்கின்றன.
இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வாக அமைவது இயற்கை வேளாண்மையாகும். இயற்கை வேளாண்மை முறையில் பயிர் சாகுபடியை மேற்கொள்வதன் மூலம் சாகுபடி செலவு குறைகிறது. மேலும் அதிக மகசூல் பெறுவதுடன் மண்ணின் வளமும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் மண்ணின் இயற்பியல் மற்றும் உயிரியல் காரணிகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
இயற்கை வேளாண்மையில் கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்வதன் மூலம் பயிர் மகசூல் அதிகரிக்கிறது. களைச்செடிகளின் எண்ணிக்கை கட்டுபடுத்தப்படுகிறது. ஊடு பயிர் மூலம் ஒரே பயிரை வளர்க்காமல் பல்வேறு பயிர்கள் பயிரிடுவதன் மூலம் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.
இத்தகைய பயிர்கள் கவர்ச்சிப் பயிர்களாகவும் பயன்படுகின்றன. இவை பூச்சிகளைக் கவர்ந்து முக்கிய பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கின்றன. மேலும் இவற்றின் மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைநிறுத்தி பயிர்களுக்கு ஊட்டம் அளிக்கின்றன. அதனால் மண்ணின் வளமும் மேம்படுகின்றன.