தென்னிந்தியாவில் ஆண்டு முழுவதும் பயிரிட தகுதியான ஒரு பயிர் “கோதுமை”…

Asianet News Tamil  
Published : Mar 25, 2017, 01:11 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
தென்னிந்தியாவில் ஆண்டு முழுவதும் பயிரிட தகுதியான ஒரு பயிர் “கோதுமை”…

சுருக்கம்

In South India a crop grown throughout the year qualified wheat

தென் இந்தியாவிலும் கோதுமை ஒரு முக்கிய உணவாக மாறிவிட்டது. இதன் தேவை வெளிநாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்வதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோதுமையை பயிரிட்டு விவசாயிகள் லாபம் பெறலாம்.

ரகங்கள்:

கோதுமையில் ரொட்டி கோதுமை, சம்பா கோதுமை என இரண்டு ரகங்கள் உள்ளன.

ரொட்டி கோதுமை கோ டபிள்யு (டபிள்யு 1), சம்பா கோதுமையில் டி.என்.ஏ.யூ, கோ டபிள்யூ என இரண்டு ரகங்கள் உள்ளன. இவற்றின் வயது 110 முதல் 115 நாள்கள் ஆகும்.

பருவம்:

தென்னிந்திய பகுதிகளில் ஆண்டு முழுவதும் கோதுமையை பயிரிடலாம். இருப்பினும் ஐப்பசி பட்டம், மார்கழி பருவத்திலும் கோதுமையை பயிரிடலாம்.

விதைப்பு:

காய்கறி விளைவிக்கப்பட்ட நிலங்களில், கோதுமை பயிரிடப்பட்டால் நிலத்தை அதிகம் பண்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பண்படுத்திய நிலத்தை 23 செ.மீ. இடைவெளியில் 5 செ.மீ. ஆழத்தில் நேர்கோட்டில் தொடர்ந்து விதைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ விதை போதுமானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நோய்களைத் தவிர்க்க, ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் பெவிஸ்டின் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.

வரிக்கு வரி இடைவெளி 23 செ.மீ. என்ற அளவில் கையினாலோ அல்லது விதைப்பான் மூலமோ விதைகள் விதைக்கப்பட வேண்டும். பின்னர் வரிகள் மூடப்பட்டு நீர்ப்பாசனம் செய்யப்பட வேண்டும். உரஅளவு: ஹெக்டேருக்கு 100 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து 30 கிலோ சாம்பல் சத்து இடலாம். எனினும் மண் பரிசோதனைக்கு பின்னர் உர அளவை நிர்ணயம் செய்ய வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் பாதியளவு தழைச்சத்தும், முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்துகளை அடி உரமாக இட வேண்டும்.

பாசன முறை:

கோதுமை பயிருக்கு குறைந்தது ஐந்து முறை பாசனம் அவசியமாகிறது. மழைக்காலங்களில் சில பாசனங்களை தவிர்க்கலாம். விதைத்த உடன், 15-20 நாள்களுக்குள், 35-40 நாள்களுக்குள், 50-55 நாள்களுக்குள் (பூக்கும் பருவம்), 70-75 நாள்களுக்குள் (பால் பிடிக்கும் பருவம்) தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

களை எடுத்தல்:

களைகொத்து மூலம் விதைத்த 20-25 நாள்களுக்குள் களை எடுக்க வேண்டும். 40-45 நாள்களுக்குப் பிறகு கையினால் களை எடுத்தல் அவசியம். 60-65 நாள்களுக்கு பிறகு மீண்டும் கையினால் களை எடுக்க வேண்டும்.

முளைப்புக்கு முன்பாக, முதல் தண்ணீர் பாய்ச்சியவுடன் களைக்கொல்லியையும் பயன்படுத்தலாம்.

பயிர் பாதுகாப்பு:

வெளியிடப்பட்டுள்ள ரகங்கள் துருநோய் எதிர்ப்புத் திறன் கொண்டவை. எனவே பூஞ்சாணக் கொல்லிகள் தேவைபடுவதில்லை. எனினும் பால் பிடிக்கும் பருவத்தில் மழை இருக்குமானால் கான்டாப் (எக்ஸ்கோனசோல்) ஒரு முறை தெளிப்பதன் மூலம் கதிர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தி விதையின் தரத்தை உயர்த்தலாம். 

அறுவடை:

முதிர்ந்த கதிரைப் பிடுங்கி எடுத்தோ, அரிவாளைக் கொண்டோ அறுத்தெடுக்கலாம். கதிர் அடிப்பான் கொண்டு கதிரை அடிக்க வேண்டும். அல்லது பழைய முறைகளை கொண்டு தாளடித்தல், டிராக்டர் மூலம் தாளடித்தல், கோணிப் பையில் இட்டு மட்டை கொண்டு அடித்தல் போன்ற முறைகளை பின்பற்றலாம்.

விளைச்சல்:

சிறப்பாக பராமரிக்கப்படும் ரொட்டி கோதுமை, ஹெக்டேருக்கு 5500 கிலோ முதல் 6500 கிலோ வரை விளையும்.

சம்பா கோதுமை ஹெக்டெருக்கு 5000 கிலோ விளைச்சல் தரும்.

PREV
click me!

Recommended Stories

Kitchen Garden: மளிகை செலவு இனி பாதிதான்! கோடையில் இந்த 10 காய்களை ஈஸியா வளர்க்கலாம்!
Succulent Plants: உங்க வீட்டுக்கு ஒரு Luxury Villa லுக் வேண்டுமா? இந்த 5 செடிகளை வையுங்க!