வேளாண்மையில் பயிர்த் தொழிலோடு அதனுடன் தொடர்புடைய உபதொழில்களைச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விஞ்ஞான முறைப்படி இணைப்பது ஒருங்கிணைந்தப் பண்ணையத் திட்டம் ஆகும்.
இதன் அடிப்படைத் தத்துவம் யாதெனில், வேளாண் சார் தொழில்களில் ஒரு தொழிலின் கழிவுப் பொருள் அடுத்த தொழிலில் இடுபொருளாக பயன்படுவதாகும்.
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் என்பது பயிர் தொழிலுடன் கறவை மாடு வளர்ப்பு, வேளாண் காடுகள் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, சாண எரிவாயு கலன் அமைத்தல், இயற்கை உரம் தயாரித்தல், மற்றும், முயல், பன்றி, பட்டுப்புழு வளர்ப்பு ஆகியவை ஆகும்.
விவசாயிகளின் நிரந்தரமற்ற வருவாயை மேம்படுத்தவும் கூலியாட்கள் பற்றாக்குறையை தவிர்ப்பதையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்.
ஒருங்கிணைந்த பண்ணையத்தின் பயன்கள்:
1. ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதோடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.
2. சுய வேலை வாய்ப்பினையும், வேளாண் சார்ந்த சிறு தொழில்களையும், முன்னேற்றம் அடையச் செய்துள்ளது.
3. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பண்ணை கழிவுகள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு மூலப் பொருட்கள் விரயம் ஆவதைத் தடுக்கிறது.
4. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கால்நடை மற்றும் மீன் வளர்ப்பில் வரும் கழிவுப் பொருட்கள் மக்கிய நிலையில் தொழு உரமாக பயிர் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
5. மறு சுழற்சி, மூலப்பொருள் திறன் மேம்பாடு மற்றும் குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தை பயன்படுத்தும் திறன் ஆகியவற்றின் மூலம் நீடித்த மண்வளம் மற்றும் குறிப்பிட்ட அளவு நிலத்தில் இருந்து கிடைக்கும் வருவாய் மற்றும் இலாபம் மும்மடங்காக்கப்படுகிறது.
6. காய்கறிகள், பால், முட்டை, காளான் மற்றும் இறைச்சி போன்றவற்றின்மூலம் நிலையான வருவாய் கிடைப்பதோடு, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற உணவு ஊட்டச்சத்துக்களாக கிடைக்கின்றன.
7. வேளாண் வனவியலின் மூலம் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது.
8. ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஊடு பயிராக அல்லது வரப்போரத்தில் தீவனப் பயிர்களை பசு, ஆடு மற்றும் முயல் போன்ற கால்நடைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைக்கிறது.
9. தண்ணீரின் தேவையைப் புரிந்து கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்ளப்படுகிறது.
தற்போதைய பொருளாதார நிலையை மனதில் கொண்டு ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தை விவசாயிகள் அமல்படுத்த வேண்டும்.