நெற்பயிர் சாகுபடியில் நீர் நிறுத்தாமல் சிக்கன நீர்ப்பாசன முறையான திருந்திய நெல் சாகுபடி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் நுண்ணீர் பாசன முறைகளை கையாள்வது சிறந்தது.
மேலாண்மைசாகுபடி செய்யும் பயிர் நன்றாக வளர்ந்து அதிக விளைச்சல் கொடுக்க வளமான நிலமும், நீர்ப்பாசனத்திற்கு ஏற்ற தண்ணீரும் தேவை. எனவே பாசன நீரின் குணம் மற்றும் தரத்தை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம்.
பாசன நீரினை பரிசோதனை செய்து அதற்கேற்ப பயிர் சாகுபடி செய்வது விவசாயிகளுக்கு லாபம் தரும். பாசனத்திற்கு உபயோகப்படும் நீர் நல்ல நீராக இருக்க வேண்டும். பொதுவாக நீரின் குணம் என்பது அதில் கரைந்துள்ள உப்புச்சத்துக்களின் அளவு, அவைகளின் தன்மைகள் ஆகியவற்றைப் பொறுத்தது.
நீரில் கலந்துள்ள உப்புகளின் மொத்த அளவு 150 மி.கி./லிட்டர் – நல்ல மகசூல் பெறலாம். 150 – 500 மி.கி../லிட்டர் – திருப்திகரமான மகசூல் கிடைக்கும். 500 – 1500 மி.கி../குறைந்த மகசூல் மட்டுமே. 1500 மி.கி../லிட்டர் – உப்பு எதிர்ப்பு சக்தியுள்ள பயிர்கள் மட்டும் சாகுபடி செய்ய இயலும்.
ஆழ்துளை குழாய் கிணறுகளில் நீரின் தரம் குறையும்போது நீர் ஏற்றும் குழாய்களில் (பி.வி.சி./எச்.டி.பி.இ.எஸ்., பைப்) உப்பு படிந்து, காற்றழுத்த பம்புகள் வெளிக்கொண்டு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்து விடுகின்றது. இதனால் விவசாயிகள் அடிக்கடி நீர் ஏற்றும் குழாய்களை மாற்ற வேண்டியுள்ளது.
தண்ணீரின் உவர்த்தன்மையே இதற்கு முக்கிய காரணம். நீரின் கார அமிலத்தன்மை மற்றும் கார்பனேட், இரும்பு மற்றும் மாங்கனீசு சத்துக்களின் அளவு அதிகமாக இருந்தால் குழாய்களில் உப்பு படியும். உப்புகளால் அடைக்கப்பட்ட குழாய்களை ‘தெர்மோடெக்’ உபகரணத்தில் இட்டு நீர் ஊற்றி அதனை சுமார் 70 டிகிரி சென்டிகிரேட் அளவில் சூடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு செய்யும்போது பி.வி.சி., குழாய்கள் சற்று விரிவடைந்து படிந்துள்ள உப்புப் படிவங்கள் விடுபட்டுவிடும். பின் பி.வி.சி., குழாய்களை மீண்டும் எவ்வித சேதமுமின்றி நீர் இறைக்கப் பயன்படுத்தலாம்.