தேக்கு மரத்தில் பக்ககிளை களை அகற்றுதல்:
தேக்கு மரங்கள் நல்ல தரமானதாகவும், பருமனாகவும், நேராகவும், பக்ககிளைகள் இல்லாததாகவும் வளர்ந்தால் தான் அதிக வருவாய் கிடைக்கும். ஆகவே பக்க கிளைகளை மரத்திற்கு சேதாரம் இல்லாமல் கழித்து விடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் ஜீலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் பக்ககிளைகளை வெட்டி அகற்றிவிட வேண்டும்.
ஐந்தாம் ஆண்டில் இடை வரிசைகளை கலைத்தல் :
மேலும் தேக்கு மரங்கள் அடர்ந்த வளர்ந்து வரும் நிலையில் நட்ட 5ம் ஆண்டில் இடை வரிசைகளில் உள்ள மரங்களை நீக்கி மீதி மரங்கள் நல்ல பருமனாகி வளர வழி செய்ய வேண்டும்.
அதாவது முதல் 5வது ஆண்டில் கலைத்தல் செய்யும் போது மூலைவிட்ட வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒருவரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்துவிட வேண்டும். உதாரணமாக 2மீX2மீ இடைவெளியில் தேக்கு மரக்கன்றுகளை நடும்பொழுது ஏக்கருக்கு 1000 மரங்கள் இருக்கும். இதில் 500 மரங்கள் வெட்டி எடுக்க வேண்டும்.
தேக்கு மரம் கலைத்தல் முதல் வருவாய் :
ஐந்தாம் ஆண்டில் 500 மரங்களை கலைத்து அப்புறப்படுத்த வேண்டும். ஒரு தேக்கு தடிமரத்தின் விலை ரூ. 100 – வீதம் 500 தேக்கு தடிமரங்களின் சந்தை விலை ரூ. 50,000/- ஆகும்.
பன்னிரெண்டாம் ஆண்டில் இடைவரிசைகளை கலைத்தல் :
அடுத்த 12ம் ஆண்டில் நடவு வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்து விட வேண்டும். இப்பொழுது ஏக்கருக்கு 250 மரங்கள் மீதம் இருக்கும் .
தேக்கு மரம் கலைத்தல் இரண்டாம் வருவாய் :
பன்னிரெண்டாம் ஆண்டில் 250 மரங்களை கலைத்து அப்புறப்படுத்த வேண்டும். ஒரு தேக்கு தடிமரத்தின் விலை ரூ.1000 வீதம் 250 தேக்கு தடிமரங்களின் சந்தை விலை ரூ. 2,50,000/- ஆகும்.
மேற்படி மரங்களை நன்கு பராமரித்து வளர்த்தால் சுமார் 30 ஆண்டுகளில் நல்ல மகசூல் கிடைக்கும். 30ம் ஆண்டில் 1 ஏக்கரில் 250 தேக்கு மரங்கள் வளர்ந்திருக்கும்.