சென்னையில் சேகரமாகும், ஒரு நாளைய குப்பை, 4,500 டன்னுக்கும் மேல்; ஒரு நாளைக்கு ஒருவர் உருவாக்கும் குப்பை, 750 கிராமுக்கும் மேல், கட்டட இடிபாடுகள், 700 டன்.
சென்னையில் உள்ள, குப்பை கிடங்குகள், 11. அவற்றில், கொடுங்கையூர், மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குகளின் பரப்பளவு மட்டும், தலா 200 ஏக்கர். அவை ஒவ்வொன்றிலும், நாள் ஒன்றுக்கு, 2,400 டன் வரை குப்பை கொட்டப்படுகிறது. குப்பையால் நீராதாரங்கள், உயிரி கள் பாதிக்கப்பட்டு, அவற்றின் மூலம், பகுதிவாசிகளுக்கும் பரவக்கூடிய நோய்களின் பட்டியல் நீளமானது.
”சென்னையின் மிகப்பெரிய பிரச்னை குப்பை. அதை, எப்படி குறைப்பது?” என்ற நம் கேள்விக்கு, கடந்த பத்து ஆண்டுகளாக, குப்பை மேலாண்மையில் சிறப்பு கவனம் செலுத்தி வரும், நவ்னீத் ராகவன், 58. கூறியதாவது:
சென்னையில், ஒரு வீட்டை இடித்து, பத்து வீடுகள் கட்ட துவங்கிய பின் தான், குப்பை ஒரு பிரச்னையாக மாறிப்போனது.
அதே நேரம், குப்பையை கையாள்வதை கேவலமாகவும், மனித மனம் பார்க்கத் துவங்கியது.
தற்போது, நம் வீட்டில் இருந்து, குப்பை சென்றால் போதும் என்ற மனநிலை தான் அனைவரிடமும் உள்ளது. இது மாற, குப்பை பற்றிய விழிப்புணர்வும், புரிதலும் வர வேண்டும். முடிந்த அளவு, வீட்டிலேயே குப்பையை குறைக்கும் முறைகளை கற்க வேண்டும்.
குறிப்பாக, பொருட்களை வாங்க செல்லும் போது, துணி, கோணி பைகளை எடுத்துச் செல்லலாம். அப்படியாக தான், வீட்டில் பிளாஸ்டிக் பைகளின் சேர்க்கையை குறைக்க முடியும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்கும் பொருட்களை வாங்குவதை குறைக்க வேண்டும்.
நாம் கொட்டும் குப்பையில், உயிர்ச்சூழலால் சிதைபடும் குப்பை, 60 சதவீதமும், மறுசுழற்சி செய்யும் குப்பை, 20 சதவீதமும், மருத்துவ கழிவுகள், 10 சதவீதம், மின்னணு கழிவுகள், 10 சதவீதம், மற்றும் குப்பைக்கு மட்டுமே போக வேண்டிய குழந்தைகளின் டையாபர், பெண்களின் நாப்கின், சிகரெட், இறந்த உயிரிகளின் உடல்கள் உள்ளிட்டவை 10 சதவீதம் உள்ளன.
அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, குப்பைக் கிடங்குகளில், அறிவியலுக்கும் சட்டத்திற்கும் எதிரான முறையில் கொட்டப்படுகிறது.
உயிர் குப்பையுடன், பாட்டரி, பிளாஸ்டிக், குழல் விளக்குகள், மருந்துகள் உள்ளிட்டவை கலந்து, நிலம், நீர், காற்றை மாசுபடுத்தி, அங்குள்ள மக்களையும், உயிர்ச்சூழலையும் பாதிக்கிறது.
மின்னணு குப்பை, பிளாஸ்டிக், காகிதம் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் கடைகளில் கொடுத்து, மறுசுழற்சியை ஊக்குவிக்கலாம். உயிர்க்குப்பையை, இயற்கை உரமாக மாற்றி, நாம் வளர்க்கும் தோட்டச் செடிகளுக்கு உரமாக்கலாம் அல்லது விற்பனை செய்யலாம். அதற்கு, தனி நபராகவோ, அடுக்கு மாடி குழுவாகவோ செயல்படுத்தும் வகையில், எளிய கருவிகளை கொண்ட தொழில்நுட்பங்கள் உள்ளன.