ஏலக்காய்
இரகங்கள்:
முடிகிரி 1, முடிகிரி 2, பிவி 1, ஐசிஆர்ஐ 1, ஐசிஆர்ஐ 3, டி கே டீ 4, ஐ ஐ எஸ் ஆர் ஸ்வர்ணா, ஐ ஐ எஸ் ஆர் விஜிதா, ஐ ஐ எஸ் ஆர் அவினாஷ், ஐசிஆர்ஐ 2, பிவி 2, நிஜாலனி.
மண் மற்றும் தட்பவெப்பநிலை:
நிழலான பகுதிகளில், வடிகால் வசதியள்ள இரும்பொறை மண் உகந்தது. காற்றில் அதிக ஈரப்பதம் மிகுந்த மிதமான தட்பவெப்பநிலையில் இது நன்கு வளரும். மண்ணின் கார அமிலத் தன்மை 6-6.5க்குள் இருந்தால் அவசியம். அதிகமாக காற்று வீசும் பகுதிகளில் இதனைப் பயிரிட முடியாது.
பருவம்:
ஜூன் - டிசம்பர்
இனப்பெருக்கம்:
ஏலக்காய் விதை மூலமும், நிலத்தடி தண்டு கிழங்கு மூலமும் இனப்பெருக்கம் செய்யலாம்.
விதையும் விதைப்பும்
நாற்றுகள் / ஒட்டுக்கன்றுகளை கொண்டு இனப்பெருக்கம் செய்யலாம்.
விதை பயிர்பெருக்கம்
நல்ல ஆரோக்கியமான செடிகளிலிருந்து விதைகளைச் சேகரித்துக் கொள்ளவேண்டும்.
ஒரு எக்டர் நடுவதற்கு 600 கிராம் விதைகள் தேவைப்படும்.
விதைகளை வணிகத்தரம் வாய்ந்த கந்தக அமிலம் அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் 20 நிமிடம் வைத்திருந்து பின்பு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.
தேவையான அளவுக்கு மேட்டுப்பாத்திகள் அமைத்து, அதில் நன்றாய்ப் பொடி செய்த மக்கிய தொழு உரம், மரச்சாம்பல் மற்றும் அங்ககச் சத்து நிறைந்த மண் இவற்றை சம அளவில் பாத்திகளில் கலந்து விடவேண்டும்.
இந்தப் பாத்திகளின் குறுக்கே கோடுகள் கிழித்து ஒரே சீராக விதைகளை விதைத்து மணல் கொண்டு மூடவேண்டும்
பின்பு அவற்றின் மேல் காய்ந்த புல் அல்லது வைக்கோல் கொண்டு இலேசாக பூவாளியின் உதவி கொண்டு தண்ணீர் தெளிக்கவேண்டும்.
விதைத்த மூன்றாம் மாதத்தில் செடிகள் முளைக்க ஆரம்பிக்கும் சுமார் ஒரு வருடம் ஆன பிறகு நாற்றுக்கள் இரண்டாம்நிலை நாற்றாங்காலில் நடுவதற்கு தயாராக இருக்கும்.
நிலம் தயாரித்தல்:
நடவு நிலத்தில் 60 செ.மீ நீள. அகல, ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும். குழிகளில் மேல் மண் மற்றும் இலை மட்கு போன்றவற்றை இட்டு நிரப்பி, குழிகளின் மத்தியில் நாற்றுக்களை நடவேண்டும்.
இடைவெளி:
குழிகளின் இடைவெளி உயரமாக வளரும் செடிகளுக்கு 2.5x2.0 மீட்டராகவும், குட்டையாக வளரும் செடிகளுக்கு 2.0 x 1.5 மீட்டர் இருக்குமாறும் அமைத்துக் கொள்ளவேண்டும்.
நீர்ப்பாசனம்:
பொதுவாக ஏலக்காய் மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டாலும், கோடை காலங்களில் தெளிப்பு நீர்ப்பாசனம் செய்யப்பட்டாலும் மகசூல் திறனை அதிகப்படுத்தலாம்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
பின்செய் நேர்த்தியாக தேவைப்படும் போது களை எடுக்கவேண்டும். பழுத்த, காய்ந்த இலைகளையும், கிளைகளையும் மே - ஜூன் மாதங்களில் களைந்து அப்புறப்படுத்த வேண்டும். மழைக்குப் பின் செடிகளைச் சுற்றி மண் வெட்டியால் கொத்தி விடவேண்டும்.
அறுவடை
ஏலக்காய் நட்ட மூன்றாம் வருடத்தில் இருந்து காய்க்கத்தொடங்கும். மே - ஜுன் மாதங்களில் அதிக அளவில் பூக்கும் பூ காயாக மாறி முற்றுவதற்கு சுமார் 8 மாதங்கள் பிடிக்கும்.
மாதத்திற்கு ஒரு முறை காய்களை அறுவடை செய்யலாம். அறுவடையாகும் காய்கள், வெவ்வேறு முதிர்ச்சி நிலையில் காணப்படும். விதைகள் முதிர்ந்து கருமை நிறமடையும் நிலையில் காய்களை காம்புகளுடன் அறுவடை செய்யவேண்டும்.
காய்களை நன்றாக முதிர்ச்சியடைய விட்டு அறுவடை செய்தால், காயவைக்கும் போது காய்கள் வெடித்துச் சிதற வாய்ப்புண்டு. எனவே அறுவடையை கவனமாக செய்யவேண்டும்.