மரங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது சந்தனமரம். சந்தனம் ஒரு வெப்ப மண்டல மரம். வெப்ப மண்டல தட்பவெட்ப நிலைகளில் மட்டுமே நன்கு வளரக்கூடிய மரம்.
சந்தனம் விதைகள் மூலமாக அதிகம் நடவு செய்யப்படுகிறது. அடுத்து இதன் பழங்களை பறவைகள் உண்பதால் பறவையின் எச்சம் மூலமும் விதைகள் பரவி முளைக்கின்றன.
உலகிலேயே கர்நாடக மாநில காடுகளில் தான் அதிக அளவில் சந்தனமரங்கள் உள்ளன. அதே சமயத்தில் இங்குள்ள மரங்கள் தான் உலக தரம் வாய்ந்தவை
சந்தன செடியை நம் வீடு மற்றும் வயல்களில் நடும்போது, அவசியம் அரசாங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து பின் நம் நில அளவு எண்ணை தெரிவித்து ஆவனங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் அதை வெட்டி விற்பனை செய்யும்போது பிரச்சனை இல்லாமல் இருக்கும். அரசு அனுமதியின்றி சந்தன மரம் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
நம் வீடுகளில் அல்லது வயல்களில் நாம் கன்றுகளை நடவு செய்யும்போது, சிறிது வளர்ந்த அகத்தி செடியை சந்தன மரத்துடன் சேர்த்து நடும்போது சந்தனச் செடியின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
ஏனெனில் அகத்தி செடிகள் காற்றில் உள்ள நைட்ரஜனை அவற்றின் வேர் மூலமாக மண்ணில் நிலை நிறுத்துவதால் சந்தனம் வேகமாக வளரும். சந்தனமரக்கன்று நன்கு வளர்ந்த உடன் அகத்தியை எளிதாக வேரோடு நீக்கி விடலாம்.
மண் தன்மையை பொறுத்து சந்தனத்திற்கு தேவையான இடைவெளியில் தண்ணீர் பாய்சவேண்டும். தண்ணீர் அதிகம் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இயற்கை உரங்கள் கொடுத்தாலே சந்தனத்தில் வளர்ச்சி நன்றாக இருக்கும். நட்ட ஐந்தாம் வருடத்தில் இருந்து பூக்கள் உருவாகும்.
மரம் வெட்டும் பருவம் அடைய குறைந்த பட்சம் இருபத்தைந்து ஆண்டுகள ஆகும். சர்வதேச சந்தையில் சந்தனக்கட்டைகளுக்கு விலை மதிப்பு அதிகம்.
சந்தன மரம் விலை உயர்ந்த மரம் ஆகையால் கண்டிப்பாக பாதுகாப்பு உடைய பகுதிகளில் மட்டுமே நடவேண்டும்.
நாம் பயன்படுத்தும் வாசனை திரவியங்களில் உயர் தர வாசனை உடையது சந்தனம் மட்டுமே. சந்தன மரங்களில் இருந்து எண்ணெய் சந்தன எண்ணெய் எடுக்கப்படுகிறது.
வீடு உபயோக பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிப்பிலும் சந்தன மரம் பயன்படுத்தபடுகிறது.