நாட்டுக் கோழிகளை ஆழ்கூளமுறையிலும் வளர்க்கலாம்.கூண்டு முறையிலும் வளர்க்கலாம்.ஆழ்கூள முறை செலவு குறைவானது. அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும்.
குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும்.
undefined
வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.
அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும்.
கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இதற்கு என அலகு வெட்டும் மிசின் உள்ளது.அலகு வெட்டாவிட்டால் குஞ்சுகள் ஒன்றையொன்று கொத்திக் கொண்டு பாதிக்கு பாதி இறந்து விடும்.
நாட்டுக் கோழி வளர்ப்பில் உள்ள இந்த சிக்கலின் காரணமாகத்தான் இதனை ஆயிரக்கணக்கில் வளர்ப்பதற்கு வியாபார நிறுவனங்கள் முன் வருவதில்லை.இதனை நாம் நமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம்.இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம்.
சேவல்களின் எடை சீக்கிரமே அதிகரிக்கும். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகமாகும். சந்தையில் சேவலை விட விடைக் கோழிகளுக்கு நல்ல விலை உண்டு.