கிராம்பு:
கிராம்பு ஒரு வெப்ப மண்டலப் பயிராகும்.
நல்ல வெதுவெதுப்பான, ஈரப்பதம் உள்ள சூழ்நிலையில் நன்கு வளரும்.
மழையின் அளவு ஆண்டுக்கு 150 முதல் 200 செ.மீ. வரை இருந்தாலே போதும்.
வெப்பநிலை 20 -30 டிகிரி செல்சியஸ் இருக்கும் நிலையில் இது நன்றாக வளரும்.
கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை நன்கு வளரும்.
நல்ல வடிகால் வசதி கொண்ட மணல் கலந்த களிமண் இதன் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.
நடவு
1.. முதலாவதாக மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும்.
2.. விதைகளை 2 செ.மீ. இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.
3.. விதைகள் முளைத்து நான்கு அல்லது ஐந்து இலைகள் வரும் வரை நிழலில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
4.. 10 முதல் 15 நாட்களில் எல்லா விதைகளும் முளைத்துவிடும். முளைத்த விதைகளைச் சிறிய பாலிதீன் பைகளில் ஒரு பைக்கு ஒன்று வீதம் நடவு செய்ய வேண்டும்.
5.. ஓர் ஆண்டுக்குப்பிறகு மீண்டும் நாற்றுக்களைப் பெரிய பாலிதீன் பைகளுக்கு மாற்றி நடவு செய்ய வேண்டும்.
6.. 18 முதல் 24 மாத வயது உடைய நாற்றுக்களை ஆறு மீட்டர் இடைவெளி விட்டு 75 x 75 x 75 செ.மீ. குழிகளில் நடவேண்டும். பருவகால மழை தொடங்கிய உடன் நாற்றுக்களை நடவு செய்துகொள்வது நலமாகும்.
7.. ஒரு வயது நிரம்பிய இளம் செடிகளின் விஷயத்தில் செடி ஒன்றுக்கு 15 கிலோ மக்கிய தொழு உரம், 20 கிராம் தழைச்சத்து, 20 கிராம் மணிச்சத்து, 60 கிராம் சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய ரசாயன உரங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இடவேண்டும்.
8.. ஏழு வயதான மரத்திற்கு 50 கிலோ தொழு உரம், 300 கிராம் தழைச்சத்து, 300 கிராம் மணிச்சத்து, 960 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய ரசாயன உரங்களை இடவேண்டும்.
9.. மழை இல்லாத காலகட்டங்களில் இளம் செடிகளுக்குத் தேவை ஏற்படுகின்றபொழுது தண்ணீர் பாய்ச்சுவது அவசியமாகும்.
10.. வளர்ச்சிபெற்ற மரங்களுக்கு அவ்வப்போது நன்கு நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காய்ப்புத்திறன் அதிகமாகும்.
11.. கிராம்பு மரத்தில் அடர்ந்து வளர்ந்த, பக்கவாட்டுக் கிளைகளில் சிலவற்றைக் கவாத்து செய்ய வேண்டும். மரத்தைச்சுற்றி களை எடுத்து, காய்ந்த இலைச் சருகுகளை மேலாகப்பரப்பி, மண்ணின் ஈரத்தன்மையைக் காக்க வேண்டும்.
12.. நான்காவது ஆண்டிலிருந்து அறுவடை செய்யலாம். பூக்கள் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தோன்றத் தொடங்கும்.
13.. பூ பூத்த ஆறு மாதங்களில் பூ மொக்குகள் பச்சை நிறத்திலிருந்து இளம் சிவப்பு நிறமாக மாறும். அச்சமயம் பூக்கள் இதழ் விரியத் தொடங்குவதற்கு முன்பு பறித்துவிட வேண்டும். கொத்து கொத்தாகத் தோன்றும் எல்லா மொட்டுகளையும் அறுவடை செய்ய வேண்டும்.
14.. அறுவடை செய்த அடுத்த நாள் இளம் வெயிலில் ஆறு நாட்கள் நன்கு உலரும் வரை காயவைக்க வேண்டும்.
15.. மரம் ஒன்றுக்கு மூன்று கிலோ வரை உலர்ந்த கிராம்பு கிடைக்கும்.