தாவரத்தின் தீவிரவாதியாகக் கருதப்படும் பார்த்தீனியம் மனிதனுக்கும் கால்நடைகளுக்கும், பயிர் வகைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பயங்கரவாத செடி.
பருவகால செடி
பார்த்தீனியம்என்ற பெயர் “Parthenice” என்ற லத்தீன் வார்த்தையிருந்து தோன்றியது இச்செடியின் தாவரவியல் பெயர் ““Parthenium Hysterophorous”” என்பதாகும். அமெரிக்க நாட்டை தாயகமாகக் கொண்ட இச்செடி ஒரு பருவகால (Annuals) பயிர் வகையைச் சார்ந்தது.
இதற்கு மண்ணை ஆழமாகத் துளைத்துச் செல்லும் ஆணிவேரும், நேராக நிமிர்ந்து வளரும் உறுதியான தண்டுகளும் உண்டு. பல கிளைகள் கொண்ட பார்த்தீனியம் செடியின் இலைகள் மங்கலான பச்சை நிறத்தையும், மென்மையான உரோமங்களையும் கொண்டிருக்கும்.
இதன் பூக்கள் செடியின் மேல் பகுதியில் வெண்மை நிறத்தில் காட்சி தரும். ஒரு செடி சராசரியாக தனது வாழ்நாளில் ஒரு இலட்சம் விதைகளை உற்பத்தி செய்யும். இந்த விதைகள் கறுப்பு நிறத்தில் வெள்ளை செதில்களுடன் கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய அளவில் காணப்படும்.
பார்த்தீனியம் கட்டுப்பாடு முறைகள்
செடி ஒழிப்பு முறை இச்செடியை வெட்டி விடுவதைவிட பூக்கும்பருவத்தை அடைவதற்கு முன்னால் வேருடன் பிடுங்கி அழிப்பது சாலச்சிற ந்தது. பார்த்தீனியத்தை இளம் வளர்ச்சிப் பருவத்தில் அழிப்பதற்கு பாதுகாப்பான களைக் கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
உயிரியல் முறையில் பார்த்தினியம் செடியின் இலைகளை விரும்பித்தின்னும் பூச்சிகளை விட்டும் கட்டுப்படுத்தலாம். பார்த்தீனியம் மிகுந்துள்ள இடங்களில் கேசியா (Cassia) இனத்தைச் சார்ந்த எதிரிச் செடிகளை வளரவிட்டும் இவை பரவாமல் தடுக்கலாம்.
நன்கு நிலத்தை உழுது களைகளின்றி பண்படுத்தும் போது பார்த்தீனியம் வளருவதற்கு வாய்ப்பில்லை. அதிகமாக பார்த்தீனியம் காணப்படும் இடங்களில் அவைகளைப் பிடுங்கி உரக் குழியில்போட்டு கம்போஸ்ட் உரமாக மாற்றி விடுவது மிகவும் சிறப்பு.