தரமான பசுக்களை எப்படியெல்லாம் தேர்வு செய்யலாம் இதை வாசிச்சு தெரிஞ்சுக்குங்க…

 |  First Published Sep 13, 2017, 12:24 PM IST
How to Choose Quality Cows



** ஒரு தனிப்பட்ட பசுவின் உற்பத்தித் திறனை பாரம்பரிய உற்பத்தித் திறன், தனி மாட்டின் உற்பத்தித் திறன், சந்ததியரின் குணாதிசயங்கள் ஆகிய மூன்று காரணிகளால் அறிய முடியும்.

** இருப்பினும், இந்த மூன்று அளவுகோல்களும் எப்போதும் கிடைப்பதில்லை. அத்தகைய சமயங்களில் பசுவின் தோற்றத்தைக் கொண்டு, அதன் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்கலாம்.

Latest Videos

undefined

** பால் பண்ணைத் தொழிலுக்கு பண்ணைகளில் பராமரிக்கப்படும் பசுக்கள் தரம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும்.

** கறவை மாடுகளை வாங்கும்போது கலப்பின மாடாகவும் (ஜெர்ஸி அல்லது ப்ரிசியன் கலப்பினம்), முதல் ஈத்து மாடாக அல்லது இரண்டாவது ஈத்துக்குத் தாண்டாத மாடாகவும் இருக்க வேண்டும்.

** பால் மாடுகளில் உற்பத்தித் திறன் இரண்டாவது ஈத்தில் இருந்து 4ஆவது ஈத்து வரை அதிகரிக்கும். அதன்பிறகு, பாலின் அளவு குறையக்கூடும்.

** எனவே, பால் அதிகம் தரக்கூடிய ஈத்துள்ள 2 முதல் 4ஆவது ஈத்தில் உள்ள மாடுகள் பண்ணையில் இருப்பது அவசியம்.

** தவிர, மாடுகள் 5, 6 ஈத்துக்களைத் தாண்டும் போது, 8 முதல் 10 வயதைக் கடந்திருக்கும் என்பதால், அவற்றைப் பராமரிப்பது லாபகரமானதாக இருக்காது.

** மாடுகளை கன்று போட்ட 10 முதல் 15 நாள்களுக்குள் வாங்கிட வேண்டும்.

** ஒரு மாட்டைத் தேர்ந்தெடுக்கும்போது அதன் கண்கள் பிரகாசமாகவும், மாடுகள் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.

** வெளி உறுப்புகளிலிருந்து எந்தவித திரவம், சீழ் வரக் கூடாது.காயங்கள், புண்கள் போன்றவை இருக்கக் கூடாது.

** கால்கள் நன்றாக அமைந்து வலுவாக இருக்கவும், மாடு அசை போட்டுக் கொண்டு இருக்கவும், மேல் உதடு ஈரமாக வியர்வைகளைக் கொண்டிருக்கவும் வேண்டும்.

** பால் மடியானது நன்றாக விரிந்து உடலோடு ஒட்டி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

** பாலைக் கறந்தவுடன் சுத்தமாக சுருங்கிட வேண்டும்.

** நான்கு காம்புகள் இருக்க வேண்டும். அவை சம அளவுகளாகவும், சம இடைவெளிகளுடனும் அமைந்திருக்க வேண்டும்.

** வயிற்றின் அடிப் பகுதியில் பால் மடிக்கு முன் இருக்கும் பால் நரம்புகள் நன்றாகத் தடித்து வளைந்து நல்ல ரத்த ஓட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

** பால் மாடுகளின் நெஞ்சுப்பகுதியை விட வயிற்றுப் பகுதி அகன்று இருக்க, கால் முட்டிகளுக்கு இடையே இடைவெளி அதிகமாகவும், வயிற்றுப் பகுதி அகலமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நிறைய தீவனத்தை உள்கொண்டு அதிக அளவு பாலை உற்பத்தி செய்யும்.

** கறவை மாடுகளை சந்தையில் வாங்குவதைத் தவிர்த்து, மாட்டின் உரிமையாளரின் இடத்துக்கு நேரடியாகச் சென்று மாட்டின் கறவை அளவை தொடர்ந்து மூன்று முறை கறந்து பார்த்து வாங்க வேண்டும்.

** தவிர, மாடு விற்பனையாளரிடம் மாட்டுக்கு இதுவரை தரப்பட்ட தீவனக் கலவை, தீவனம் அளவு குறித்து தெரிந்து கொண்டு, அதே கலவையில் தர வேண்டும்.

** மாடுகளுக்கு தீவனத்தை திடீரென மாற்றக் கூடாது. மாற்றினால் ஜீரண சக்தி இழந்து பால் உற்பத்தி குறையக்கூடும்.

** அதேபோல, மாடுகளுக்கு முறையாகத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதையும் அறிந்து கொள்ள வேண்டும் 

click me!