மாட்டு கொட்டகைப் பராமரிப்பு
ஒரு சிறந்த தரமான கொட்டகை வசதியில்லாமல் கால்நடைப் பராமரிப்பு சாத்தியமன்று. கொட்டகை சரியாக திட்டமிடப்படவில்லை எனில் அது வேலைப்பளுவை அதிகரித்து கூலி ஆட்கள் செலவை உயர்த்தி விடும்.
அதே சமயம் கொட்டகை அமைப்பு ஒவ்வொரு கால்நடைக்கும் நல்ல காற்றோட்டம் வெளிச்சமும் கிடைப்பதாக இருத்தல் அவசியம். கொட்டகையின் வடிகால் வசதி, அமைப்பு சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் சுத்தமான பால் உற்பத்தியைப் பெற முடியும்.
கட்டிடத்திற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தல்:
பண்ணை துவங்குவதற்கு முன் இடத்தை சரியான முறையில் தேர்ந்தெடுத்தல் அதற்காகக் கவனிக்க வேண்டிய கருத்துக்களாவன..
இடவமைப்பு மற்றும் வடிகால்:
நாம் தேர்ந்தெடுக்கும் இடம் நல்ல வடிகால் வசதி உள்ளதாக இருக்க வேண்டும். பொதுவாக சற்று மேடான பகுதியாக இருப்பது நல்லது. அதனால் மழைநீர் மற்றும் நீர் நன்கு வடிந்து சுற்றுப்புறம் சுகாதாரமானதாக இருக்கும். நிலம் நன்கு சமன்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
மண் வகை:
கட்டிடம் எழுப்பக்கூடிய இடங்களில் மண்ணின் பாங்கு முக்கியம், களிமண் தரை கட்டிடங்களுக்கு உகந்ததல்ல ஏனெனில் களிமண் தரையில் தண்ணீர் தேங்கி நிற்கும். வண்டல் மண், சரளை மண் வகைகள் கட்டிடம் கடட ஏற்றதாகும்.
காற்று மற்றும் சூரிய ஒளி:
கட்டிடங்களின் திசையமைப்பு நல்ல காற்று வசதி கிடைக்கும். படியாகவும் அதே நேரத்தில் சூரிய வெப்பம் கால்நடைகளை நேரடியாகத் தாக்காதவாறும் அடைய வேண்டும். அதாவது பண்ணைக் கட்டிடங்களின் நீளவட்டம் கிழக்கு மேற்காக அமைவது நல்லது. வேகமாக காற்று வீசும் இடங்களில் மரங்கள் வளர்த்தால் காற்றின் வேகத்தை ஓரளவு குறைக்க உதவும்.
தொலைவு
கொட்டகையானது பிரதான சாலையிலிருந்து 100 மீ தொலைவுக்குள் எளிதில் அடையக்கூடியதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் சந்தையை அடைய முடியும்.
தண்ணீர் வசதி
சுத்தமான நல்ல குடிநீர் தாராளமாகக் கிடைக்கும் இடமாக இருத்தல் வேண்டும்.
சுற்றுப்புறம்
கட்டிடங்களைச் சுற்றியுள்ள இடம் குளிர்ச்சியாய் புல்வெளிகளில் மரம் செடிகள் வளர்க்க ஏற்ற நிலமாக அமைதல் அவசியம்
வேலை ஆட்கள்
தினசரித் தேவைக்கேற்ப நல்ல உழைப்புள்ள வேலை ஆட்கள் எளிதில் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். ஆட்களுக்கத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்கள் எப்போதும் கொட்டகை அருகிலேயே இருக்குமாறு வைத்தல் நலம்.
சந்தை
கொட்டகையானது எளிதில் நுகர்வோரை அடையுமாறு அமைந்து இருத்தல் நலம். கால்நடைப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏற்றவாறு போக்குவரத்து வசதிகள் உள்ள இடமாக இருக்க வேண்டும்.
மின்சாரம்
பண்ணையில் மின்சார இணைப்பு இருத்தல் மிக அவசியம். அதே சமயம் நமது பொருளாதார வசதிக்கேற்றவாறு மின்சார வசதி செய்துகொள்ள வேண்டும்.
தீவனம் மற்றும் இதர வசதிகள்
பண்ணை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் பயிரிடுவதற்கேற்ற நிலமாக இருத்தல் அவசியம். அப்போதுதான் கால்நடைகளுக்கு புதிதான சத்துள்ள தீவனங்கள் கொடுக்க இயலும். மேலும் கொட்டகையில் தீவனம் சேமிக்கவென்று கிடங்கு இருக்க வேண்டும். அப்போதுதான் தீவனத்திற்கு ஆகும் செலவைக் குறைக்க இயலும்.
பால் கறக்கும் இடமானது கொட்டகையின் மையத்தில் அமைந்திருக்க வேண்டும். அது எப்போது சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.