நிலக்கடலை:
சுமார் 550 மி.மீ. நீர் தேவைப்படும். நிலம் நன்கு நனையும் படி நீர்கட்ட தகுந்த ஈரப்பதத்தில் உழவு செய்தபின் விதைப்பது நல்லது. நிலம் காய்ந்திருந்தால் உயிர்த்தண்ணீர் கட்டவேண்டும். பின் 12 நாட்கள் காயவிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
undefined
அதன்பின் 10-12 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது. எனினும் விழுது இறங்கும் பருவம், காய் பிடிக்கும் பருவம் முக்கிய நீர்த்தேவை பருவங்களாகும்.
நுண்தெளிப்பு நீர்ப்பாசன முறையைக் கடைபிடிப்பதன் மூலம் 40 விழுக்காடு நீர் சேமிப்பு கிடைக்கும். வறட்சியால் வாடும் பயிர்களைக் காக்க 100 கிராம் பொட்டாஷ் உரத்தை 10 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் வேண்டிய அளவு கலந்து கைத் தெளிப்பானால் பயிர் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.
இதன்மூலம் 15-20 நாட்கள் வரை பயிரை வறட்சியிலிருந்து காக்க முடியும்.
பருத்தி:
650 மி.மீ. நீர் தேவைப்படும். நிலத்தின் தன்மைக் கேற்றவாறு 12-15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
பூக்கும் பருவம், காய் பிடிக்கும் பருவம், காய் வளர்ச்சிப் பருவம் ஆகியன முக்கிய நீர்த்தேவைப் பருவங்களாகும்.
கரும்பு:
கரும்பிற்கு மொத்தமாக 1800 மி.மீ. நீர் தேவைப்படுகிறது. வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்றபடி பின்வரும் இடைவெளி நாட்களில் நீர் பாய்ச்சலாம். முளைப்புப்பருவம் ஐந்து நாட்கள், வளர்ச்சிப்பருவம் 7 முதல் 8 நாட்கள், முதிர்ச்சிப் பருவம் 10-11 நாட்கள், இடைவெளியில் நீர் பாய்ச்சுவதால் அதிக விளைச்சல் கிடைப்பதுடன் 30 சதவீதம் வரை நீர் சேமிக்க வாய்ப்பு உண்டு. குறைந்த அளவு நீர் கொண்டு அடிக்கடி நீர் பாய்ச்சுவதால் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
ஆலைக்கழிவான “பிரஸ்மட்’ அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு எக்டருக்கு 15 டன்கள் இடுவதால் மண்ணின் நீர்பிடிப்பு தன்மை அதிகரித்து வறட்சி காலத்தில் பயிரைக் காக்கலாம்.
அகலப்பார் இடைவெளியில் சொட்டு நீர்ப்பாசன முறையில் பாசனம் செய்வதால் அதிக விளைச்சலுடன் நீர் சேமிப்பும் அடையலாம். இணைவரிசை நடவு செய்து தோகையைப் பரப்பி கணிசமான அளவு நீர் சேமிக்கலாம்.
கரும்பில் ஊடுபயிராக உளுந்து, சோயா மொச்சையைப் பயிரிட்டு அதிகப்படியான வருமானம் பெறுவதுடன் நீர் உபயோகிக்கும் திறனையும் அதிகரிக்கலாம். பின்பட்ட பருவத்தில் நடவு செய்த கரும்பு பெரும்பாலும் வறட்சியினால் பாதிக்கப்படுகிறது.
இதன் பாதிப்பு தூர் பிடிக்கும் பருவத்தில் 11 விழுக்காடு என்றும், வளர்ச்சிப் பருவத்தில் 20 விழுக்காடு என்றும் கண்டறியப் பட்டுள்ளது. இந்த விளைச்சல் இழப்பைச் சரிகட்ட 1 சதம் பொட்டாஷ் கரைசலை 30, 60, 90வது நாட்களில் சரிபாதி யூரியாவுடன் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
சொட்டுநீர் வடிவமைப்பு முறையில் 1.5 மீட்டர் இடைவெளியில் பக்கவாட்டு குழாய்கள் அமைத்தால் வடிவமைப்பினை மாற்றாமலேயே கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, தக்காளி பயிர் செய்யலாம். நூறு சத பரிந்துரைக்கப்படும் தழை, சாம்பல் சத்து உரங்களை சொட்டுநீர் உரப்பாசனம் மூலம் மேற்கூறிய பயிர்களுக்கும் கையாளலாம்
எள்:
மிகக்குறைவான அளவு நீர் அதாவது 200-250 மி.மீ. தேவைப்படுகிறது. பூக்கும், காய் பிடிக்கும் பருவங்கள் முக்கியமான நீர் பாய்ச்ச வேண்டிய பருவங்களாகும்.
சூரியகாந்தி:
பயிரின் மொத்த நீர்த்தேவை 450 மி.மீ. ஆகும். சராசரியாக 10-12 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் பருவம், விதை பிடிக்கும் பருவம் ஆகியன முக்கிய நீர்த்தேவை பருவங்களாகும்.