எருமையானது கன்ற ஈன்றவுடன் பால் கறக்க ஆரம்பிக்கிறது. முதல் ஓரிரு வாரங்களில் கறக்கும் பாலிலிருந்து அந்த எருமையின் பாலின் தன்மையை அறிந்து கொள்ளலாம். 5-6 வாரங்களில் அதிக அளவு பால் தரும். இந்த அளவு சில வாரங்களில் வரை தொடர்ந்து பின் குறைய ஆரம்பிக்கும். பின்பு கறவையின் பால் வற்ற ஆரம்பித்துவிடும்.
எருமைகள் நான்காவது கன்று ஈனும் போது அதன் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். பின்பு குறைந்து விடும். பால் கறக்கும் கால அளவு தீவனம், பராமரிப்பு, பால் கறக்கும் இடைவெளி, நோய்த்தாக்கம் போன்ற காரணிகளைப் பொறுத்தது.
பல்வேறு இன எருமைகளின் பால் உற்பத்திக் காலம் அட்டவணை 10ல் கொடுக்கப்பட்டுள்ளது. முர்ரா இன எருமைகளில் பால் உற்பத்திக் காலம் 262-295 நாட்கள் வரை ஆகும்.
பால் உற்பத்தியானது மரபியல் மற்றும் இதர பிற காரணிகளைச் சார்ந்துள்ளது. மரபியல் காரணிகளான இனங்கள், இனப்பொருக்கத் திறன், சினையாகும் திறன், அடுத்தடுத்த கன்று ஈனும் இடைவெளி போன்றவற்றைச் சாாந்து வேறுபடுகிறது. மேலும் இவை தவிர பராமரிப்பு, தீவனத்தின் தரம், அளவு, வளர்ப்பாளரின் சூட்டைக் கண்டு சினைப்படுத்தும் திறன் போன்றவற்றவைப் பொறுத்தும் பால் உற்பத்தி அளவும், காலமும் வேறுபடுகிறது.
தேவையான அளவு ஆற்றல், புரதம், தாதுக்கள், நீர் போன்ற எல்லா வகையான சத்துக்களும் உள்ள தீவனம் முறையாக அளிக்கப்படவேண்டும். அதே போல் எருமைகளில் எந்த அளவு கன்று ஈனும் இடைவெளி உள்ளதோ, அந்த அளவு பால் கறக்கும் காலமும், அளவும் அதிகமாக இருக்கும். எனினும் மொத்தம் ஈனும் கன்றுகளின் அளவு குறைவாக இருக்கும்.
பால் கறக்கும் இடைவெளி பால் அளவு மற்றும் தன்மையைப் பாதிக்கும். முர்ரா இன எருமைகளில் நாளொன்றுக்கு இரு முறை பால் கறப்பதை விட 3 முறை கறக்கும் போது பாலின் அளவு 31 சதவிகிதமும், பால் கொழுப்புச் சத்தின் அளவு 26 சதவிகிதமும் அதிகமாக கிடைக்கிறது.
எருமைகளின் காம்பு, மடியின் உள்ளமைப்பு மற்றும் உடற்கூறியல்:
எருமையின் மடி கால்நடையின் மடியை ஒத்திருந்தாலும் காம்புகள் அளவில் சற்று பெரியவை. நான்கிற்கும் மேற்பட்ட காம்புகள் இருப்பின் கன்று பிறந்த, ஓரிரு வாரங்களுக்குள் நீக்கிவிடவேண்டும். உருளை வடிவக் காம்புகளே பெரும்பாலும் முர்ரா இன மாடுகளில் காணப்படுகின்றன.
முன் இரு காம்புகள் 5-8 செ.மீ, 6.4 செ.மீ வரை நீளமும் அதன் சுற்றளவு 2.5-2.6 செ.மீ வரையும் இருக்கும். இதே போன்று பின் இரு காம்புகளும் 6-9 - 7.8 செ.மீ மற்றும் 2.6 - 2.8 செ.மீ அளவு கொண்டுள்ளன.முன்பக்க மடியை விட பின்பக்கமானது சற்று அளவில் பெரியது. பாலும் இதில் அதிக அளவில் இருக்கும்.
கால்நடை அளவீட்டின் படி 60:40 என்ற அளவில் பின் மடி மற்றும் முன்மடியில் முறையே பால் அளவு இருக்கும். பால் அதிகம் இருப்பதால் பின்பாகத்தைக் கறந்து முடிக்க அதிக நேரம் ஆகும்.
அதோடு எருமையின் காம்புகளில் பால் வரும் துளையைச் சுற்றியுள்ள தசைகளும், எபிதீலியத் திசுக்களும் சற்று தடிமனானவை. எனவே எருமையில் பால் கறக்க மாட்டை விட சற்று அதிக விசையுடன் அழுத்தவேண்டும். கன்று ஊட்டிய பின்னர் இநத அழுத்தத்தின் அளவு சற்று குறையும்.
மாடுகளில் அல்வியோலை என்ற தொகுக்கப்பட்ட பாலானது குழாய் போன்ற வெளியேற்றும் அமைப்புகளிலும், மெமரி (Memory) சுரப்பிகள் மற்றும் காம்புகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. ஆனால் எருமைகளில் அவ்வாறில்லாமல் பீய்ச்சும் போது உள்ளிருந்து வெளித்தள்ளப்படுகிறது. சீனாவின் மஞ்சள் மாடுகள் மற்றும் எருதுகளில் இவ்வாறு பாய்ச்சப்படுகிறது.
எருமைகளில் குழாய் அமைப்புகளில் சேகரித்து வைக்கப்படாததால் காம்புகள் பால் கறக்கும் தருணத்தில் தளர்ச்சியாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆனால் மாடுகளில் அப்படி இருப்பதில்லை.
பால் கறக்கும் முறை
மாட்டுடன் ஒப்பிடும் போது எருமையில் பால் கறப்பது கடினமான, மெதுவாகச் செய்யக்கூடிய செயலாகும். இதில் காம்புகள் சற்று தடிமனாக இருப்பதால் அதிக அழுத்தம் தேவைப்படுகிறது. பால் கறக்க எருமையில் ஆகும் நேரம் 2-10 நிமிடங்கள் ஆகும்.இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
எருமையில் காம்பின் துளை சிறியது. அதிக ஆற்றல் செலுத்த வேண்டி இருக்கும். மாடுகளைப் போல் பால் முதலிலேயே குழாயில் சேகரித்து வைக்கப்பட்டிருக்காது. எனவே கறக்கும் போது தான் சிறிது சிறிதாக வெளிவரும்.
பால் கறக்கும்போது கொடுக்கும் அழுத்தமானது சிறிது சிறிதாக அதிகரித்து பின்பு மெதுவாகக் குறைய வேண்டும். இந்த அழுத்தமானது கால்நடையைப் பொறுத்தும் பால் கறப்பவரைப் பொறுத்தும் வேறுபடுகிறது.சுரக்கும் பாலின் அளவு அதிகமாக இருக்கும் போது கறக்கும் வேகமும் அதிகரிக்கிறது. எனவே எருமை மாடுகள் வாங்கும் போது மடி, காம்பின் தன்மை போன்றவற்றைப் பார்த்து, கவனித்து வாங்குதல் வேண்டும்.
பால் சுரப்பைத் தூண்டுதல்
கன்றை சிறிது நேரம் பால் ஊட்ட விடுவதன் மூலமோ அல்லது கையினால் காம்பினைத் தடவி விட்டோ காம்பானது பால் சுரப்பிற்குத் தூண்டிவிடப்படுகிறது. ஏனெனில் இவ்வாறு காம்பைத் தடவி விடுவதால் மடியின் கீழேயுள்ள ஆக்ஸிடோசின் ஹார்மோனைச் சுரக்கும் நாளங்கள் தூண்டப்பட்டு, பால் சுரப்பு அதிகரிக்கிறது.
இந்த ஹார்மோன் ஆனது இரத்தத்தின் வழியாக மெமரி (Memory) சுரப்பிற்குக் கடத்தப்படுகிறது. ஏனெனில் ஹார்மோனும், நரம்பு நாளங்களும் பாலை வெளித் தள்ளுவதில் ஈடுபடுகின்றன. எனவே இவை நரம்பு ‘உட்சுரப்பு செயல்’ எனப்படுகிறது. ஆக்ஸிடோசின் ஆல்வியோலை குழாயை சுருங்கி விரியச்செய்கிறது. இதனால் குழாயிலுள்ள பால் வெளித்தள்ளப்பட்டு காம்பை வந்தடைகிறது.
இவ்வாறு அல்வியோலை வழியே வரும் பால் சுரப்பு குறைவாகவே இருக்கும். கன்று பாலூட்டும் போது மடியில் முட்டி மோதும் போதும், கையினால் மசாஜ் செய்வது போல் தடவும் போதும் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும்.
அப்போது தான் பால் சுரப்பும் அதிகரிக்கும்.மேலும் கால்நடைகளில் பால்கறப்பதற்கு முன்பு அடர் தீவனமளிப்பது பால் சுரப்பையும், பால் தரும் நேரத்தையும் அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பால் வெளியேற்றம்
பால் மடியில் நன்கு சுரந்து நிற்கும் போதுதான் எருமைகளில் கறக்கத் தொடங்கவேண்டும். கையினால் (அ) இயந்திரம் பயன்படுத்தினாலும், எந்த வலியும் இன்றி முறையாகக் கறத்தல் வேண்டும். அதிகமாக பால் திரிந்து விடாமல் சரியான நேரத்தில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.