எருமை மாடுகளுக்கான கொட்டகை அமைப்பு மற்றும் மேலாண்மை
மாடுகளின் உடல் நலத்தை முறையாக பேணுவதற்கும், அவற்றிற்கு தேவையான வசதிகளை அளிப்பதற்கும், தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பதற்கும் முறையான கொட்டகை அமைப்பு மிகவும் அவசியமாகும்.
மாடுகள் நல்ல உடல் நலத்துடன் பேணப்பட்டால் மட்டுமே அவை தங்களது மரபியல் உற்பத்திக் குணங்களை வெளிப்படுத்த முடியும்.
பண்ணைக் கட்டிடங்களை அமைப்பதற்கு இடத்தைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியமாகும்.
பண்ணை அமைக்க இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன் கவனிக்கப்படவேண்டியவை.
1.. மண்
நல்ல வலுவான கட்டிடங்களை அமைப்பதற்கு ஏற்ப பண்ணை அமைக்கத் தேர்ந்தெடுக்கும் இடத்தின் மண் இருக்கவேண்டும்.
களிமண், மணல் பாங்கான மண், பாறைகள் இருக்கும் மண் போன்றவை பண்ணை அமைக்க ஏற்றவையல்ல.
கடினமான மண் கொண்ட இடங்கள் பண்ணைக் கட்டிடங்கள் அமைக்க ஏற்றவை.
2.. பண்ணை அமைப்பதற்கேற்ற இட வசதி
பண்ணைக் கட்டிடங்கள் அனைத்தையும் அமைக்கும் வகையில் போதுமான அளவு இடம் இருக்கவேண்டும். இவ்வாறு போதுமான அளவு இடம் இருந்தால் மட்டுமே பண்ணையை எதிர்காலத்தில் விரிவாக்குவது எளிதாகும்.
200 மாடுகளைப் பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் குறைந்தது 2-3 ஏக்கர் அளவாவது நிலம் இருக்கவேண்டும்.தீவன உற்பத்திக்கு 2 மாடுகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படும்.
3.. வடிகால் அமைப்பு
மழை பெய்யும் போது தண்ணீர் நன்றாக வடிவதற்கு ஏற்ற வகையில் வடிகால்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் பண்ணையில் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாவது மட்டுமன்றி, பண்ணையிலுள்ள கட்டிடங்கள் ஈரமாவதையும் தடுக்கலாம்.
4.. தண்ணீர் வசதி
பண்ணையில் செய்யப்படும் பல்வேறு வேலைகளான மாடுகளைக் கழுவுதல், பசுந்தீவன உற்பத்தி, பால் பதனிடுதல், பாலிலிருந்து உப பொருட்கள் தயாரித்தல், மற்றும் குடிநீர் போன்றவற்றிற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பது அவசியமாகும்.
எனவே தொடர்ந்து பண்ணையின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய எப்போதும் தண்ணீர் இருக்கும் நீர் ஆதாரம் பண்ணையில் அவசியம் இருக்கவேண்டும்.