கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி
சூலூர் ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூரை தோட்டத்தில் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் காய்கறி விளைச்சல் களைகட்டுகிறது.
சந்தைகளில் விற்பதை விட 10 சதவீதம் விலை அதிகமாக இருந்தாலும், ரசாயன கலப்பில்லாத இந்த காய்கறிகளை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் முதன்முறாக சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் மேல் கூரைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
திட மற்றும் திரவ வள மேலாண்மை மையங்களில் உற்பத்தியாகும் உயிர் உரங்களை பயன்படுத்தி இயற்கை வேளாண்மை முறையில் இந்த தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
8000 சதுர அடியில் 1200 மூங்கில் கூடைகளில் கீரை வகைகள், தக்காளி, கத்தரி, முள்ளங்கி, வெங்காயம், பீட்ரூட், பாகற்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறி வகைகள், சோற்றுக்கற்றாழை, தூதுவளை போன்ற மருத்துவ உணவு பொருட்கள் பயிரிடப்படுகின்றன.
இந்த கூரைத் தோட்டத்தை பராமரிக்க மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 10 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு விளையும் காய்கறிகளை விற்று கிடைக்கும் வருமானத்தை அவர்கள் தங்களது சம்பளமாக பிரித்துக் கொள்கிறார்கள்.
சராசரியாக தலா ஒருவருக்கு தினமும் ரூ.150 வருமானமாக கிடைக்கிறது. மேலும், இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை விற்பனை செய்ய ஊராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் 400 சதுர அடி பரப்பளவில் அங்காடி கட்டடம் அமைப்பதற்கான கட்டுமான பணியும் நடந்து வருகிறது.