இந்தியாவில் கொத்தவரை சாகுபடி பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமாக விளங்கி வருகிறது.
குவார் எனப்படும் இந்த கொத்தவரை காய்கறி வகையைச் சேர்ந்தது அல்ல. மாறாக இந்த கொத்தவரையில் இருந்து கிடைக்கும் ஒரு வகைப் பொருள் எரிவாயு எடுக்க மற்றும் உணவுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ராஜஸ்தானில் கொத்தவரைக்கு என சந்தை உள்ளது. கொத்தவரை சாகுபடியில் பல விவசாயிகள் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொத்தவரை சாகுபடி தற்போது சேலம், கடலூர், திருவண்ணாமலை, ஈரோடு, விருதுநகர், திருச்சி, நாமக்கல், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரபலமடைந்து வருகிறது.
சாகுபடி நுட்பங்கள்:
நடவிற்கு ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்கள் ஏற்றதாகும். அனைத்து மண்வகைகளிலும் சிறப்பாக வளரக்கூடியது.
குறிப்பாக செம்மண்ணில் நன்கு வளரும். நிலத்தை இரண்டு முறை நன்கு உழுது, அடியுரமாக தொழு உரம் 5 டன் வரையும், டிஏபி 50 கிலோவும் இடவேண்டும்.
நடுவதற்கு ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை போதுமானது. நடவில் 1 ½ அடி x 1 அடி இடைவெளி விட்டு விதைகளை ஊன்ற வேண்டும்.
மாதம் இரண்டு முறை களை எடுப்பது அவசியம். 13 நாட்களுக்கு ஒரு முறை வாடவிட்டு, வாடவிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
எல்லா காய்களையும் அறுத்து களத்தில் போட்டு மிஷின் மூலம் அடிக்க வேண்டும்.
நல்ல பராமரிப்பு இருந்தால் ஏக்கருக்கு 500 முதல் 1000 கிலோ வரை விதை மகசூல் கிடைக்கும்.
எந்த சூழ்நிலையிலும் காய்கள் வெடித்து நிலத்தில் கொட்டாது.
55 முதல் 60-ஆம் நாள் செடியில் கொழுந்தை கிள்ளுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.
நிலத்தில் கொத்தவரை பயிரிடுவதால் நிலத்தில் உள்ள மணிச்சத்து, தழைச்சத்து ஆகியவை அதிகரித்து நிலம் வளம்பெறுகிறது.