நல்ல மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை தாய் தென்னை மரம் என்கிறோம். இந்த தாய் தென்னை மரங்களை தோட்டத்தில் வளர்ப்பதன் மூலம் தொடர்ந்து விதை எடுத்து புதிய தென்னை கன்றுகளை உருவாக்க முடியும்.
நல்ல தரமான தாய் மரங்களில் இருந்து விதை எடுக்க விரும்பும் விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
undefined
தென்னையில் நெட்டை, குட்டை என்ற இரண்டு ரகங்கள் இருந்த போதிலும், இந்த இரண்டு ரகங்களிலும் மாறுபட்ட அளவில் காய்க்கும் குணமுடைய வகை தென்னைகள் உள்ளன.
தாய் மரங்கள் தேர்வு செய்ய
தாய் மரங்களை தேர்வு செய்யும் போது அவை நோய் தாக்குதல் இல்லாததாகவும், சரியான வயதுடையவையாகவும் இருத்தல் வேண்டும். இலையழுகல், இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் கேரளா அல்லது தஞ்சை வாடல் நோய் இல்லாத மரங்கள் விதை எடுக்க ஏற்றவை. பொதுவாக, தஞ்சை வாடல் நோய் தாக்கப்பட்ட மரங்களின் திசுக்களில் கானோடெர்மாலுசிடம் என்ற பூசாண இழைகள் காணப்படும்.
இந்த நோய்களில் உள்ள கிருமிகள் மற்றும் பூசாணங்கள் காய்களின் மூலம் கன்றுகளுக்கு பரவும் தன்மை உடையவை. இதனால் இந்த நோய் காணப்படும் மரங்களை தாய் மரங்களாக தேர்வு செய்யக்கூடாது. இலைப்புள்ளி, இலைக்கருகல் மற்றும் குருத்தழுகல் போன்ற பூசாண நோய்களால் மரங்கள் தாக்கப்படுகின்றன.
ஆனால் தோப்பில் ஒரு சில மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. ஆனால் அதே தோப்பில் வேறு பல மரங்கள் இந்த நோயினால் தாக்கப்படுவதில்லை. இந்த வகை எதிர்ப்பு திறனுள்ள மரங்களை தேர்வு செய்ய வேண்டும்.
காய் முளைக்கும் போது உருவாகும் கன்றுகளின் வளர்ச்சி, வீரியம் ஒரே சீராக இருத்தல் அவசியம். ஒரு சில தாய் மரங்களில் இருந்து எடுக்கப்படும் விதை தேங்காயிலிருந்து உருவாகும் கன்றுகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான வளர்ச்சி வீரியத்துடன் காணப்படுவது இயல்பு.
ஆகவே நல்ல முளைப்பு திறன் மற்றும் ஒரே சீரான வளர்ச்சி வீரியம் ஒருங்கிணைந்த குணங்கள் உடைய கன்றுகளை தரும் மரங்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.