நாட்டுக் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருப்பதால் இந்தக் கோழிகளை குறைந்த அளவே நோய்கள் தாக்குகின்றன.
இவற்றில் வெள்ளைக் கழிச்சல், அம்மை நோய், ரத்தக் கழிச்சல், ஒட்டுண்ணி நோய்கள், பற்றாக்குறை நோய்கள் முக்கியமானவை.
அ. வெள்ளைக் கழிச்சல்:
நாட்டுக் கோழிகளைத் தாக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளைக் கழிச்சல் நோய், கோடை மற்றும் குளிர் காலப் பருவ மாற்றத்தின் போது தாக்கக்கூடியதாகும்.
நோய் பாதிக்கப்பட்ட கோழிகளின் எச்சம், சளி, காற்று மூலமாகவும், பண்ணையாள்கள், தீவனம் மற்றும் தண்ணீர் மூலமாகவும் பரவுக்கூடியது. இதைக் கொக்கு நோய் என்றும் கூறுவார்கள்.
நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம், தண்ணீர் எடுக்காது. வெள்ளை மற்றும் பச்சையாகக் கழியும். எச்சமிடும் போது ஒரு காலை மட்டும் தூக்கிக் கொள்ளும். ஓர் இறகு மட்டும் செயலிழந்து தொங்கும். தலையை முறுக்கிக் கொண்டு விரைவில் இறந்து விடும்.
பண்ணையில் ஒரு கோழியை நோய்க் கிருமி தாக்கினால் ஏறத்தாழ எல்லாக் கோழிகளும் இறக்கக் கூடும். எனவே, வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு தடுப்பூசி போடுவது அவசியம்.
ஆ. அம்மை நோய்:
கோழிகளின் இறகு அற்ற பகுதிகள், உறுப்புகளைப் பாதிக்கும் நச்சுயிரி நோயே அம்மை நோயாகும். முதலில் பரு உண்டாகி, பிறகு அதில் சீல் கட்டி நீர் கோர்த்த கொப்பளங்களாகி உடைந்து விடும்.
இந்தச் சமயத்தில் உடல் வெப்பம் அதிகரிக்கும், சோர்ந்து அசைவற்ற நிலையில் இருக்கும். உடல் எடையும், முட்டை உற்பத்தியும் குறையும். பண்ணைகளில் 20-30 சதம் வரை இறப்பு ஏற்படக்கூடும்.
கோடைக் காலங்களிலேயே ஏற்படக்கூடிய இந்த நோய், அம்மையின் காய்ந்த உதிர்ந்த பொடுகுகள், கொசுக்களின் வழியாகப் பரவுகிறது. இந்த நோய் பரவாமல் இருக்கத் தடுப்பூசி போடுவது அவசியம்.
இ. ரத்தக் கழிச்சல்:
மூன்று வார வயதுக்கு மேலான குஞ்சுகள், கோழிகளை ஈரமான இடத்தில் அடைத்து வைக்கும்போது ரத்தக் கழிச்சல் அதிகளவில் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளின் குடல் வீங்கி ரத்தக் கசிவு ஏற்படுவதால் எச்சத்தில் ரத்தக் கசிவு காணப்படும். இதைத் தடுக்க கொட்டகையைச் சுத்தமாகவும், ஈரமின்றியும் பாதுகாக்க வேண்டும்.
ஈ. ஒட்டுண்ணி நோய்கள்:
ஒட்டுண்ணி நோய்கள் அக ஒட்டுண்ணி, புற ஒட்டுண்ணி என இரு வகைப்படும். திறந்த வெளியில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளை அதிகளவில் அக ஒட்டுண்ணிகள் தாக்குகின்றன.
உருண்டை, நாடாப் புழுக்கள் கோழிகளைத் தாக்கி உணவு செரிமானக் கோளாறு, கழிச்சலை உண்டாக்குவதோடு இறப்புகளையும் ஏற்படுத்தும்.
இதனால், ஆழ்கூள முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு மாதம் ஒரு முறையும், கூண்டு முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு 3 மாதத்துக்கு ஒரு முறையும் குடல்புழு நீக்கம் செய்வது அவசியம்.
உ. பற்றாக்குறை நோய்கள்:
தோல் முட்டையிடுதல், கால்வாதம் மற்றும் கோழிகள் ஒன்றையொன்று கொத்துதல் ஆகியவை பற்றாக்குறை நோய்களாகும்.
வெயில் காலங்களிலும், கூண்டு முறை கோழி வளர்ப்பிலும் அதிகமாகக் காணப்படும் தோல் முட்டையிடுதல் நோயைத் தவிர்க்கத் தீவனத்தில் கால்சியம், வைட்டமின் டி, பாஸ்பரஸ் சத்துகள் மற்றும் கிளிஞ்சல் தூளை அதிகப்படியாகக் கலந்து கொடுக்க வேண்டும்.
கூண்டு முறையில் கோழிகளை வளர்க்கும் போது கோழிகளின் கால்கள் வலுவிழந்து நிற்க முடியாமலும், உண்ண முடியாமலும் இறப்பதே கால் வாதமாகும். இந்த நோய் தாக்கிய கோழிகளைக் கூண்டிலிருந்து வெளியே எடுத்து ஆழ் கூளத்தில் சில நாள்கள் விட வேண்டும்.
குடிநீரிலும், தீவனத்திலும் கால்சியம் அதிகமுள்ள சத்து மருந்துகளை சில நாள்கள் கொடுக்க வேண்டும்.
வைட்டமின் பி12 உயிர்ச்சத்து மருந்தை ஊசி மூலம் செலுத்துவதன் மூலமும் இந்த நோயைத் தவிர்க்கலாம்.
தீவனத்தில் நார்ச்சத்து, புரதம், அமினோ அமிலங்களும், காற்றோட்ட வசதி, இடவசதி, தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், புற ஒட்டுண்ணிகள் இருந்தாலும் கோழிகள் ஒன்றையொன்று கொத்திக் கொள்ளக்கூடும்.
இதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதன் மூலம் இந்தப் பாதிப்பை தடுக்க முடியும்.