ஆண்டு முழுவதும் கொத்தமல்லியை சுழற்சி முறையில் சாகுபடி செய்யலாம்.
மணல் கலந்த செம்மண் பூமியில், கொத்தமல்லி அருமையாக விளையும்.
இதன் வயது 45 நாட்கள்.
நிலத்தை பொலபொலவென உழுது மண்ணைப் புழுதியாக்கிக் கொள்ள வேண்டும்.
அரை ஏக்கருக்கு இரண்டு டன் தொழுவுரம் அல்லது,
5 டன் கோழி எருவை அடியுரமாக இட்டு, இரண்டு முறை உழ வேண்டும். கோழி எரு போடும் போது கொஞ்சம் கவனமாக இருக்கணும். அதில், காரத்தன்மை அதிகமாக இருக்கும். அதனால், காற்றோட்டமான இடத்தில் குவியலாக கொட்டி வைத்து, 45 நாள் ஆன பிறகுதான் அதை வயலில் போட வேண்டும். இல்லையென்றால் பயிர்களோட வேரை அது பாதித்துவிடும்.
இடவசதிக்கு ஏற்ப சதுர பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பாத்திகளில் சிறுசிறு மண்கட்டிகள், கற்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி, மண்ணை சமன் செய்து விதைக்க வேண்டும். அரை ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும்.
விதைக்கும் போது ஓரிடத்தில் அதிகமாகவும் இன்னோரிடத்தில் குறைவாகவும் விதைகள் விழுந்தால், முளைப்பு சீராக இருக்காது. அதனால், கவனமாக விதைத்து, பாத்திகளில் உள்ள விதைகளை மண் மூடும்படி குச்சி கொண்டு கீறி, மண் நனையும் அளவிற்கு மட்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
விதைத்த 3–ம் நாளில் உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
விதைத்த 8 – ம் நாளில் இருந்து 10 நாட்களுக்குள் முளைக்கத் தொடங்கும். 20-ம் நாளில் களை எடுத்து, பயிர் வளர்ச்சி ஊக்கியாக 25 கிலோ தழை – மணி – சாம்பல் சத்துக் கொண்ட உரத்தை பாசன நீரில் கரைத்துவிட வேண்டும்.
30–ம் நாளில் செடிகள் ‘தளதள’வென வளர்ந்து பச்சைக்கட்டி நிற்கும். அதன் வாசமும் நிறமும் பூச்சிகளை ஈர்க்கும்.
அசுவிணி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கூட்டமாக வந்து செடிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
இதைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசலை, 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும்.
45 – ம் நாளில் செடிகள் பாத்தி தெரியாத அளவிற்கு வளர்ந்து நிற்கும் இதுதான் அறுவடை தருணம். அளவான ஈரத்தில் செடிகளை வேருடன் பிடுங்கி, இரண்டு கைப்பிடி அளவிற்கு வைத்து வாழை நார் கொண்டு கட்டுகளாககக் கட்டி வேர்ப்பகுதியை மட்டும் தண்ணீரில் அலசி, வேர்களில் படிந்துள்ள மண்ணை அகற்ற வேண்டும்.
நிழலான இடத்தில் வரிசையாக கட்டுகளை அடுக்கி வைத்து, ஈரத்துணி கொண்டு மூடி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தழைகள் வாடி உதிர்ந்து போகாமல் இருக்கும். கொத்தமல்லி, விரைவில் வாடிப்போகும் என்பதால், அறுவடை செய்த உடனே விற்று விடுவது நல்லது.
கொத்தமல்லியைப் பொறுத்த மட்டும் எப்பவும் கிராக்கி இருந்து கொண்டேயிருக்கும். அறுவடைக்கு நான்கு நாளைக்கு முன்பே வியாபாரிகள் வந்து பாத்திகளை கணக்குப் போட்டு முன்பணம் கொடுப்பாங்க. அதற்காக அவங்களை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.
உழவர் சந்தை, தினசரி மார்க்கெட் என்று நாமாகவே நேரில் கொண்டு சென்றும் விற்கலாம். அரை ஏக்கரில் 3 ஆயிரத்து 500 கிலோ மகசூல் கிடைக்கம்.
கிலோ 12 ரூபாய் என்று விலை பேசி வியாபாரிகளிடம் விற்றால் கூட 42 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
மொத்த செலவு 12 ஆயிரம் ரூபாய் போக, 30 ஆயிரம் ரூபாய் லாபம்.. அதுவும் 45 நாளில்…