கத்திரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம்.
புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் (கோஜலம்) ஊறவைத்து, நன்றாகக் கொதிக்கவைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து பிஞ்சுப்பருவம் மற்றும் காய்ப்பருவம் ஆகிய இரண்டு பருவங்களில் செடிகள் நனையும்படி தெளிக்கலாம்.
செடிகளைத் தாக்கும் பூச்சிகளை விரட்டியடிக்கும் ஆற்றல், இந்த புகையிலை+பூண்டுக் கரைசலுக்கு உண்டு.
நொச்சி, வேம்பு, ஆடுதொடாஇலை (ஆடாதோடை), நிலவேம்பு, பப்பாளி இலை என கிள்ளினால், பால் வடியும் ஐந்து இலைகளையும் சம அளவில் சேகரித்து 2 லிட்டர் மாட்டுச்சிறுநீரில் (கோஜலம்) ஒரு நாள் முழுக்க ஊறவைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி விகிதம் கலந்து, அதிகாலை அல்லது இளமாலை வேளைகளில் செடிகள் மீது தெளிக்கவேண்டும்.
தொடர்ந்து பிஞ்சுப்பருவம், காய்ப்பருவம் ஆகிய நாட்களில் தெளித்துவர, காய்ப்புழு, அசுவணி, இலைப்பூஞ்சணம் உள்ளிட்ட நோய்கள் அகன்று சீரான மகசூலைப் பெறலாம்.