நல்ல மகசூலை தரும் வெட்டிவேர் சாகுபடி... பயன்களும் அதிகம்...

 |  First Published May 10, 2018, 2:04 PM IST
chrysopogon cultivation that gives good yield ... more benefits



வெட்டிவேர்

வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும்.

நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல் வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.

வேர் கொத்துக்கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டிவேர் என வழங்கப்படுகிறது.

இதன் வேர் கருப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். இதனை பெண்கள் மணத்திற்காக தலையிலும் அணிவதுண்டு. இது உடலின் வேர்வையும் சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம்.

வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும். இது லெமன்கிரேஸ், பாம்ரோசா புல் போன்று வளரும்.

வெட்டி வேர் மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும். நம் முன்னோர்கள் வெட்டிவேர் ஊறப்போட்ட சில்லென்ற பானைத்தண்ணீர், வெக்கையை விரட்டி அடிக்க வெட்டிவேர் தட்டி என்று அதன் மகிமையை முழுவதுமாக உணர்ந்திருந்தார்கள்.

வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள். இக்கால விஞ்ஞானிகள் வெட்டிவேர் கொண்டு பாய், காலணி, தலைக்குத் தொப்பி போன்றவற்றை தயாரிக்கிறார்கள்.

வெளிநாட்டவர் பலரும் அதன் பயனை அடைகிறார்கள். இத்தகைய மருத்துவம் வாய்ந்த வெட்டிவேரை எப்படி பயிர்செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு எத்தகைய மண்ணாக இருந்தாலும் பாதகமில்லை.ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வேர் நிச்சயம். மணல்பாங்கான நிலமாக இருந்தால் வேர் நன்கு இறங்கி விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். இரண்டு டன்னுக்கு மேலும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
 

click me!